டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் கடந்த சில தினங்களாக பங்கு பெற்று வந்த ஒருவர் இன்று தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து இந்த போராட்டத்தில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. இவர் தற்கொலைக்கு முன்பு பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்தப் போராட்டத்தின் தீவிரம் இன்னும் குறையவில்லை. நாளுக்கு நாள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. அரசு பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை.
இந்நிலையில் நாளை மறுநாள் (29ம் தேதி) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதற்கிடையே போராட்டத்தில் கலந்து கொண்டு வந்த 2 பேர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்தது. ஹரியானாவில் உள்ள குருத்வாராவில் புரோகிதராக இருந்து வந்த பாபா ராம் சிங் என்பவர் முதலில் தற்கொலை செய்து கொண்டார். விவசாயிகளுக்கு மத்திய அரசிடமிருந்து எந்த நீதியும் கிடைக்கவில்லை என்று கூறி இவர் தற்கொலை செய்து கொண்டார். இதன் பின்னர் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊருக்கு திரும்பிய 22 வயதான பஞ்சாபை சேர்ந்த குர்லப் சிங் என்ற விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இன்று மூன்றாவதாக மேலும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டெல்லி போராட்டத்தில் கலந்து கொண்டு வந்த அமர்ஜித் சிங் என்பவர் தான் இன்று தற்கொலை செய்து கொண்ட 3வது நபர் ஆவார்.
டெல்லி எல்லையில் உள்ள திக்ரி என்ற இடத்தில் கடந்த சில தினங்களாக போராட்டத்தில் கலந்து கொண்டு வந்த இவர், இன்று தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டார். பஞ்சாப் மாநிலம் ஜலாலாபாத்தில் வக்கீலாக பணிபுரிந்து வந்த இவர், விவசாயமும் செய்து வந்தார். தற்கொலைக்கு முன் அவர் பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். பிரதமர் ஒரு சர்வாதிகாரி போல செயல்படுகிறார் என்றும், மக்கள் தங்களுடைய உணவுக்காக போராட்டம் நடத்துவதை பிரதமர் கண்டுகொள்ள மறுக்கிறார் என்றும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாயிகளின் போராட்டத்தை அலட்சியம் செய்யும் பிரதமரின் நடவடிக்கையை கண்டித்துத் தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து இதுவரை விவசாயிகள் போராட்டத்தில் தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.