கொரோனா தொற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள லாரி மற்றும் மோட்டார் வாகன உரிமையாளர்களுக்கு உதவும் வகையில் மோட்டார் வாகனங்களுக்கான வரிகள் செலுத்த வரும் 2021 மார்ச் வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக இயக்குனர் பியூஸ் ஜெயின் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது: கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் தேதி முதல் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அப்போது பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு சரக்கு லாரிகளை இயக்க விதி விலக்கு அளித்தது.
ஊரடங்கு நேரத்தில் இயக்கப்படும் சரக்கு வாகனங்கள் வரி கட்டவோ, எப்.சி சான்றிதழ் பெறவோ, டிரைவிங் லைசென்ஸ் புதுப்பிக்கவோ ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்கு செல்ல முடியாத நிலையில் லாரிகள் உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் வரிகளை செலுத்த, எப்.சி சான்றிதழ், டிரைவிங் லைசென்ஸ் புதுப்பித்தல் போன்ற சான்றுகள், ஏற்கனவே இருந்து நிலையில் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் காலாவதியான ஆவணங்கள் அனைத்தும் டிசம்பர் மாதம் வரை செல்லுபடியாகும் என்று அறிவித்தது, அனைத்து மாநில ஆர்டிஓ அலுவலகங்களும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
கொரோனா ஊரடங்கு இன்னும் வாபஸ் பெறப்படாததால் கடந்த பிப்ரவரி மாதம் முடிவுக்கு வந்த மோட்டார் வாகனங்களின் எப்.சி சான்றிதழ், அனைத்து மோட்டார் வாகன வரிகள், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட சான்றிதழ்கள் அனைத்தும் வரும் 2021 மார்ச் 31ம் தேதி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்படுகிறது. அனைத்து மோட்டார் வாகன உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், இந்த விதிமுறைகளை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.