வாட்ஸ்அப்பில் இந்த டிரிக்குகள் உங்களுக்குத் தெரியுமா?

by SAM ASIR, Dec 27, 2020, 16:48 PM IST

இந்தியாவில் பெரும்பாலானோர் பயன்படுத்துகிற செய்தி செயலி வாட்ஸ்அப் ஆகும். வாட்ஸ்அப்பில் பல வசதிகள் இருந்தாலும் பயனர்கள் எப்போதும் கூடுதலான வசதிகளை எதிர்பார்ப்பது, தேடுவது வழக்கம். உங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் செய்திகளை அனுப்புகிறவர்கள், உண்மையான அலைபேசி எண்ணை பயன்படுத்துகிறார்களா அல்லது போலி எண்ணை பயன்படுத்துகிறார்களா என்பதை தெரிந்துகொள்வது உள்ளிட்ட சில தந்திரங்கள் (tricks) உள்ளன. அதுபோல் வாட்ஸ்அப்புக்கான சில டிரிக்குகளை தெரிந்துகொள்ளுங்கள்.

ஆடியோ மெசேஜ்
வாட்ஸ்அப்பில் யாராவது ஆடியோ மெசேஜ் அனுப்பினால் உடனே இயர்போனை தேட வேண்டாம். அந்த மெசேஜ் ஒலிக்கும்படி ப்ளே பொத்தானை அழுத்திவிட்டு, உங்கள் காதின் அருகே ஸ்மார்ட்போனை கொண்டு செல்லுங்கள். மெசேஜ் ஒலிக்கும்படியான பொத்தானை அழுத்திவிட்டு காதின் அருகே ஸ்மார்ட்போனை கொண்டு சென்றால், ஆடியோவானது ஸ்பீக்கரில் ஒலிக்காது. மாறாக, யாரோ மறுமுனையிலிருந்து பேசுவதுபோன்று காதின் அருகே உள்ள ஒலிப்பான் (earpiece) வழியாக ஒலிக்கும். 'வாக்கி-டாக்கி'யில் பேசுவது போன்று நீங்கள் பதில் பேச முடியும். ஆடியோ செய்திக்கு நீங்கள் பதிலை டைப் செய்து அனுப்பவோ, அனுப்பியவரை அலைபேசி வழியாக அழைத்துப் பேசவோ அவசியமில்லை. சிறு ஒலி கோப்புகளாகவே பதில் அனுப்பலாம்.

உண்மையான எண் தேவையில்லை
வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கு உங்களுடைய உண்மையான அலைபேசி எண்ணை பதிவு செய்யவேண்டும் என்ற அவசியமில்லை. மெய்நிகர் (virtual) எண்ணை கட்டணமின்றி பெற்று பயன்படுத்தலாம். TextNow போன்ற செயலிகள் இதற்கு உள்ளன. இந்த செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் தரவிறக்கம் செய்து, அதில் கட்டணமில்லாத கணக்கு ஒன்றை உருவாக்கிக்கொள்ளுங்கள். அதனுள் நுழைந்ததும் (logging-in) அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் கனடா நாடுகளை அடிப்படையாக கொண்ட ஐந்து இலவச தொலைபேசி எண்களின் பட்டியல் தெரியும். அவற்றுள் நீங்கள் விரும்பும் எண்ணை தெரிவு செய்து பயன்படுத்தலாம். இந்த மெய்நிகர் (virtual) எண்ணை கொண்டு வாட்ஸ்அப் கணக்கு உருவாக்கி பயன்படுத்தலாம்.

வாட்ஸ்அப்புக்கு லேண்ட்லைன் எண்
வாட்ஸ்அப் பயன்படுத்துவதற்கு லேண்ட்லைன் எண்ணை உபயோகிக்கலாம். ஆனால் அதற்கு வாட்ஸ்அப் பிஸினஸ் என்ற செயலியை நீங்கள் தரவிறக்கம் செய்யவேண்டும். வாட்ஸ்அப் பிஸினஸ் செயலி உங்கள் ஸ்மார்ட்போனில் நிறுவப்பட்ட பிறகு, பதிவு செய்வதற்காக ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) செயலி கேட்கும். இந்தியாவுக்கான குறியீட்டு எண்ணை (+91)தெரிவு செய்து பின்னர் STD குறியீட்டுடன் லேண்ட்லைன் எண்ணை தெரிவு செய்யவும். முன்னால் '0' போடக்கூடாது. தொலைபேசி எண்ணை உள்ளிட்டதும் வாட்ஸ்அப் பிஸினஸ் செயலி கடவுச்சொல்லை (OTP) அனுப்பும். லேண்ட்லைன் எண் என்பதால் என் குறுஞ்செய்தியும் (SMS) வராது. கடவுச்சொல்லுக்கான நேரம் கடந்ததும், கடவுச்சொல்லை சரிபார்ப்பதற்காக 'Call meங என்ற முறையை தெரிவு செய்யவும்.

புளூ டிக் இல்லாமல் வாசிக்கலாம்
வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வந்ததும், அந்த அறிவிக்கையை (notification) தேய்த்துவிடாமல் (swiping away) திரையை மட்டும் unlock செய்யவும். அப்போது செயலியை திறக்காமல் முழு பதிவையும் உங்களால் வாசிக்கமுடியும். செய்தியை அனுப்பியவருக்கு அது வாசிக்கப்பட்டதற்கான அடையாளமாகிய நீல நிற குறிகள் (blue tick) தெரியாது.

பிளாக் செய்யப்பட்டதை அறிதல்
நம்முடைய தொடர்பு பட்டியலில் பெயர், எண் இருக்கும் ஒருவருக்கு வாட்ஸ்அப் மூலம் செய்தியை அனுப்பினால் அது அவருக்குச் சென்று சேர்ந்ததற்கு அடையாளமாக இரண்டு tick குறியீடுகள் வராமல் ஒரே ஒரு tick குறியீடு மட்டும் இருந்தால் அவர் நம்மை block செய்திருக்கிறார் என்று புரிந்துகொள்ளலாம்.

போலி எண்ணை அறிதல்
போலி எண்ணைக் கொண்டு வாட்ஸ்அப் கணக்கு உருவாக்குவது எளிது. வாட்ஸ்அப்பில் ஒரு செய்தி வந்ததும் அதை அனுப்பியவரின் விவரப்பட்டியை (profile) பார்க்கவும். செய்தியை அனுப்ப பயன்படுத்தப்பட்டுள்ள எண் +91 என்பதில் ஆரம்பித்தால் அது உண்மையான எண். பெரும்பாலும் போலி எண்கள் +1 என்று தொடங்கும். இந்தியாவில் உள்ளவர் வேறு நாட்டின் குறியீடு கொண்ட எண்ணை பயன்படுத்தினால் அது போலி வாட்ஸ்அப் கணக்காக இருக்க வாய்ப்புள்ளது.

வேறு யாராவது வாசிக்கிறார்களா?
வாட்ஸ்அப் வெப் என்ற செயலியை பயன்படுத்தி மடிக்கணினி அல்லது மேசைக்கணினியில் வாட்ஸ்அப் செய்தால், வேறு யாரும் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் கணக்குக்குள் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. செட்டிங்ஸ் என்ற பகுதிக்குச் சென்று அறியப்படாத எந்த சாதனமும் (unknown device) உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்தவில்லை என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

You'r reading வாட்ஸ்அப்பில் இந்த டிரிக்குகள் உங்களுக்குத் தெரியுமா? Originally posted on The Subeditor Tamil

More Special article News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை