திருவனந்தபுரம் மாநகராட்சியில் இடது முன்னணி கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் 19 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மேயர் ஆனார். இதையடுத்து இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மேயராகும் முதல் நபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாநகராட்சி தற்போது இந்தியா முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியாவிலேயே மிக குறைந்த வயதில் ஒருவர் இந்த மாநகராட்சிக்கு மேயர் ஆனது தான் இதற்கு காரணமாகும். திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. இதில் 47 வது வார்டில் இடது முன்னணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆர்யா ராஜேந்திரன் (21) போட்டியிட்டார். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெறும் வரை இவர் மேயர் ஆவார் என்பதை அவர் கூட கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் அதிர்ஷ்டக்காற்று அவர் பக்கம் வீசியதால் தற்போது இவர் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மேயராகும் முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் திருவனந்தபுரத்தில் தனது பெற்றோருடன் ஒரு வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். இவரது அண்ணன் கடந்த வருடம் துபாய் சென்று அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மாநகராட்சியில் பெரும்பான்மையான கவுன்சிலர்கள் இடது முன்னணிக்கு இருப்பதால் ஆர்யா ராஜேந்திரன் மேயராவது உறுதியாகி இருந்தது. ஆனாலும் மேயர் தேர்தலுக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டதால் இன்று வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இதன்படி இன்று திருவனந்தபுரம் மாநகராட்சியில் வாக்கெடுப்பு நடந்தது. இடது முன்னணி சார்பில் ஆர்யா ராஜேந்திரனும், பாஜக கூட்டணி சார்பில் சிமி ஜோதிஷும், காங்கிரஸ் கூட்டணி சார்பில் மேரி புஷ்பமும் போட்டியிட்டனர். இதில் ஆர்யா ராஜேந்திரன் 54 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் புதிய மேயராக அறிவிக்கப்பட்டார். பாஜக வேட்பாளர் சிமி ஜோதிஷுக்கு 35 வாக்குகளும், காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் மேரி புஷ்பத்துக்கு 9 வாக்குகளும் கிடைத்தன. ஒரு உறுப்பினர் சுய தனிமையில் இருப்பதால் அவர் வாக்கெடுப்புக்கு வரவில்லை. தொடர்ந்து ஆர்யா ராஜேந்திரன் புதிய மேயராக பொறுப்பேற்றார். அவருக்கு திருவனந்தபுரம் மாவட்ட கலெக்டர் நவ்ஜோத் கோஷா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.