காங்கிரஸ் 136வது ஆண்டு விழாவை புறக்கணித்து இத்தாலிக்கு சென்ற ராகுல்காந்தி..

by எஸ். எம். கணபதி, Dec 28, 2020, 15:07 PM IST

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் 136வது ஆண்டு விழாவை புறக்கணித்து விட்டு இத்தாலிக்குத் தனிப்பட்ட பயணம் மேற்கொண்டிருக்கிறார்.கடந்த 2014ம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு, தொடர்ந்து பல தேர்தல்களிலும் காங்கிரஸ் பெரும் தோல்வியைச் சந்தித்து வருகிறது. கட்சித் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகியதை அடுத்து தற்காலிக தலைவராக சோனியா காந்தி உள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கபில்சிபல், குலாம் நபி ஆசாத், சசிதரூர், மணீஷ்திவாரி, குரியன் உள்பட 23 பேர் சேர்ந்து கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில் சோனியா பதவி விலகி, நிரந்தர தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமெனக் கோரியிருந்தனர். அப்போது சலசலப்புகள் ஏற்பட்டு கடைசியில் சோனியாவே இடைக்காலத் தலைவராகத் தொடர்கிறார்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும், ராகுல்காந்தியும் விவசாயிகள் போராட்டம் உள்பட பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வந்தனர். மேலும், தங்கள் ட்விட்டர் பக்கத்தில் மோடி அரசைக் கடுமையாக விமர்சித்துப் பதிவுகளைப் போட்டு வந்தனர். எனினும், ராகுல்காந்தி தொடர்ச்சியாக அரசியலில் இல்லாமல் திடீர் திடீரென வெளிநாடுகளுக்குப் போய் விடுகிறார். இதை பாஜகவினர் கிண்டலாக விமர்சித்தும் வருகின்றனர்.தற்போது ராகுல்காந்தி திடீரென இத்தாலி நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். மிலனில் அவரது தாய் வழிப் பாட்டி இருக்கிறார். அவருடன் இணைந்து புத்தாண்டு கொண்டாடச் செல்லப் போயிருப்பதாகக் கூறப்படுகிறது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா கூறுகையில், ராகுல்காந்தி தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்றிருக்கிறார். விடுமுறையில் சென்றுள்ள அவர் சில நாட்களில் நாடு திரும்புவார் என்று தெரிவித்தார்.

அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் 136வது ஆண்டு விழா இன்று(டிச.28) கொண்டாடப்படுகிறது. இதைப் புறக்கணித்து விட்டு ராகுல்காந்தி வெளிநாடு சென்றது அக்கட்சியின் அதிருப்தி தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. இப்படி இருந்தால் எப்படி கட்சி வளரும் என்று அவர்கள் முணுமுணுக்கின்றனர். மேலும், கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி, தோல்விகளைப் பற்றிய ஆலோசனைக் கூட்டத்திலும் ராகுல்காந்தி பங்கேற்கவில்லை. இத்தனைக்கும் அவர் தற்போது கேரளாவில் உள்ள வயநாடு தொகுதி எம்.பி.யாக உள்ளார். கட்சியின் மேலிடப் பிரதிநிதி தாரிக் அன்வர் தற்போது கேரள உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.

You'r reading காங்கிரஸ் 136வது ஆண்டு விழாவை புறக்கணித்து இத்தாலிக்கு சென்ற ராகுல்காந்தி.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை