இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியது பீதியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 3 பேர் பெங்களூருவையும், 2 பேர் ஹைதராபாத்தையும், ஒருவர் பூனாவையும் சேர்ந்தவர்கள் ஆவர்.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகின்ற போதிலும் இந்த வைரஸ் ஏற்படுத்திய பீதி இன்னும் குறையவில்லை. தற்போது நிலவரப்படி உலகில் 8 கோடியே 16 லட்சம் பேருக்கும் மேல் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17 லட்சத்து 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளனர். மற்ற நாடுகளை விட இந்தியாவில் தற்போது நோய் பரவல் வெகுவாக குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 16,432 பேருக்கு நோய் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 1 கோடியே 2 லட்சத்து 24 ஆயிரத்து 303 பேருக்கு நோய் பரவியுள்ளது. கடந்த ஜூன் மாதத்திற்குப் பின்னர் இது தான் இந்தியாவில் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். கடந்த 24 மணி நேரத்தில் நோய் பாதிக்கப்பட்டு இந்தியாவில் 252 பேர் மரணமடைந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளில் மேலும் பீதியை அதிகரித்துள்ளது.
இதையடுத்து இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்குப் பரவாமல் இருப்பதற்காகக் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி உட்பட பெரும்பாலான நாடுகள் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. ஆனாலும் இந்த வைரஸ் ஜப்பான், இத்தாலி உட்பட்ட நாடுகளில் பரவியிருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்திலிருந்து டெல்லி, அமிர்தசரஸ், சென்னை உள்பட நகரங்களுக்கு வந்த பயணிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 30க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பரவியிருப்பது தெரியவந்தது.
இவர்களுக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவி உள்ளதா என்பதைக் கண்டு பிடிப்பதற்காக அவர்களது உமிழ்நீர் மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பரவியிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 3 பேர் பெங்களூருவையும், 2 பேர் ஹைதராபாத்தையும், ஒருவர் பூனாவையும் சேர்ந்தவர்கள் ஆவர். இந்தியாவிலும் இந்த புதிய வகை வைரஸ் பரவியிருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது.