சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தி வந்த 4 பேர் பிடிபட்டனர். கொரோனா நோய் பரவல் காரணமாக வெளிநாடுகளுக்கு நீண்ட நாட்களாக விமானங்கள் இயக்கப்படாமல் இருந்தது. தற்போது சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து சிறப்பு விமானம் நேற்று(டிச.29) திருச்சிக்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளின் லக்கேஜ்களை வழக்கம் போல் விமான நிலைய ஊழியர்கள் சோதனை செய்தனர். புதுக்கோட்டை மற்றும் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேர் சுமார் 4 கிலோ தங்கத்தை பல்வேறு விதமாக மறைத்துக் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
செல்வராஜ், நடராஜன் ஆகியோரிடம் இருந்து தலா ஒன்றரை கிலோ, வெங்கடேசன் என்பவரிடம் 250 கிராம், செந்தில் என்பவரிடம் 850 கிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. மற்றொருவர் தப்பியோடி விட்டார். தங்கத்தைப் பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள், அவர்கள் 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி இருக்கலாம் என்று அதிகாரிகள் கூறினர்.