டெல்லியில் 35வது நாளாகப் போராடும் 40 விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மீண்டும் இன்று(டிச.30) மதியம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(டிச.30) 35வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத்தான் லாபம் என்றும் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், தோமர் ஆகியோர் நான்கைந்து முறை நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுவார்த்தை நடத்தினார். அதிலும் உடன்பாடு எட்டவில்லை. இதனால், கடந்த 9ம் தேதி முதல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில், மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு விவசாயச் சங்கங்களை அழைத்துள்ளது. மத்திய வேளாண்துறை செயலாளர் சஞ்சய் அகர்வால் அனுப்பிய கடிதத்தில், இன்று(டிச.30) மதியம் 2 மணிக்கு விஞ்ஞான பவனில் நடைபெறும் பேச்சுவார்த்தைக்குப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 40 விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.இது தொடர்பாக, முக்கிய சங்கமான சம்யுக்தா கிஷான் மோர்ச்சா தலைவர்கள் கூறுகையில், மூன்று சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை சட்டரீதியாக உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளின் அடிப்படையில்தான் பேச்சு நடத்தப்படும் என்றார்.
டெல்லி எல்லையில் சிங்கு பகுதி, திக்ரி பகுதி உள்ளிட்ட இடங்களில் போராடும் விவசாயிகள் சலவையகம், நூலகம் மற்றும் பல்வேறு வசதிகளையும் செய்து அங்கேயே வாழத் தொடங்கி விட்டனர். இதனால் இன்றைய பேச்சில் உடன்பாடு எட்டப்படாவிட்டால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் வேளாண் சார்ந்த துறைகளில் உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்ந்து பாதிக்கப்பட்டு, பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்.