மகர விளக்கு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட்டது. நாளை முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும். சபரிமலை ஐயப்பன் கோவிலில் இவ்வருட மண்டல காலம் கடந்த 26ம் தேதி நடைபெற்ற பிரசித்திபெற்ற மண்டல பூஜையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு முன்னிலையில் மேல்சாந்தி ரெஜி நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை.
நாளை முதல் இவ்வருட மகர விளக்கு கால பூஜைகள் தொடங்குகின்றன. இதையொட்டி நாளை அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். நாளை முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கடந்த 26ம் தேதி வரை கொரோனா ஆண்டிஜன் பரிசோதனை நடத்தும் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நாளை முதல் ஆர்டிபிசிஆர் அல்லது ஆர்டி லேம்ப் அல்லது எக்ஸ்பிரஸ் நாட் ஆகிய பரிசோதனைகளில் ஏதாவது ஒரு பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழுடன் வரும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படும். மண்டல பூஜைக்காக நடை திறந்திருந்த 41 நாட்களில் போலீசார், கோவில் ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட 350க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக பக்தர்களுக்கு கொரோனா பரிசோதனையை கடுமையாக்க கேரள அரசு தீர்மானித்தது. இதனால் தான் நாளை முதல் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டது. சபரிமலையில் தற்போது தினமும் 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜை ஜனவரி 14ம் தேதி நடைபெறுகிறது. அன்று மாலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தெரியும். ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மறுநாள் 20ம் தேதி காலை சபரிமலை கோவில் நடை சாத்தப்படும். அன்றுடன் இந்த சீசனுக்கான மகர காலம் நிறைவடையும்.