இந்தியாவில் இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..

by எஸ். எம். கணபதி, Dec 31, 2020, 11:26 AM IST

இந்தியாவில் இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி விடும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.சீனாவில் தோன்றிய கொடிய ஆட்கொல்லி தொற்று நோயான கொரோனா, உலகில் பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை ஒரு கோடியே 2 லட்சத்து 66 ஆயிரம் பேருக்குப் பாதித்திருக்கிறது. இதில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர்.

முதன்முதலாக, பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் அந்த அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஜனவரி மாதத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கவுள்ளதாக ஏற்கனவே மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறியிருந்தார். கொரோனா தடுப்பூசி போடுவதற்கு முதல் கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் உள்பட 30 கோடி பேரை தேர்வு செய்துள்ளோம் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா இன்று(டிச.31) அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:மிகவும் நல்ல செய்தி. ஆக்ஸ்போர்டு-ஆஸ்ட்ரா ஜெனிகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி, இங்கிலாந்து நாட்டு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அங்கு அந்த தடுப்பு மருந்தைப் பல கட்ட சோதனைகள் செய்து, அதில் நல்ல பலன் கிடைப்பதை உறுதி செய்திருக்கிறார்கள். நாமும் அதே தடுப்பூசி மருந்தையே புனேவில் உள்ள சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தில் தயாரிக்கிறோம். இங்கும் நாம் பல சோதனைகள் செய்து அதன் பயனை உறுதிப்படுத்தி இருக்கிறோம். அந்த மருந்து தற்போது இங்கிலாந்து மட்டுமின்றி, பிரேசில், தென்னாப்பிரிக்கா நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் சில நாட்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

More India News


அண்மைய செய்திகள்