சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 4-ம் தேதி முதல் நடைபெறும் என என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வந்தாலும், பல்வேறு மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே, 70% பாடத்திட்டங்களுடன் சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பு மாணவர்கள் நடப்பு கல்வி ஆண்டை ஆன்லைன் வகுப்பு மூலம் பயின்று வந்தனர்.
தொடர்ந்து, சிபிஎஸ்இ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்கள், ஆசிரியர்களுடன் கருத்துக்களை கேட்டறிந்த மத்தியக் கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், எழுத்து முறையிலேயே பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்றும் 30 சதவீதம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்றார்.
தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தேதிகளை அறிவிப்பதாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்திருந்தார். அதன்படி, சிபிஎஸ்இ 10,12 வகுப்பு பொதுத்தேர்வுகள் மே 4-ம் தேதி முதல் ஜூன் 10-ம் தேதி வரை நடைபெறும் என்றும் ஜூலை 15-க்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். 70% பாடத்திட்டத்தில் இருந்து மட்டுமே பொதுத்தேர்வுக்கான கேள்விகள் கேட்கப்படும் என்றும் திட்டவட்டமாக ரமேஷ் பொக்ரியால் தெரிவித்தார்.