வெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் கேரள சபாநாயகரிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா முடிவு

by Nishanth, Jan 1, 2021, 13:37 PM IST

தங்கக் கடத்தல் கும்பலுடன் சேர்ந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக கூறப்படும் புகாரில் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணனிடம் சுங்க இலாகா விசாரிக்க தீர்மானித்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் விசாரணைக்கு ஆஜராக கூறி சபாநாயகருக்கு நோட்டீஸ் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரக பார்சலில் துபாயில் இருந்து தங்கம் கடத்திய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அமீரக தூதரகத்தில் துணைத் தூதரின் நிர்வாக செயலாளராக பணிபுரிந்து வந்த ஸ்வப்னா சுரேஷ், அதே தூதரகத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்து வந்த சரித்குமார் உள்பட 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த தங்க கடத்தலில் ஸ்வப்னா சுரேஷ் தான் மூளையாக செயல்பட்டு வந்துள்ளார். இவருடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட புகாரை தொடர்ந்து கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலாளராக இருந்த சிவசங்கரன் கைது செய்யப்பட்டார். இவர் ஸ்வப்னாவுடன் சேர்ந்து வெளிநாட்டுக்கு டாலர் கடத்தல் உள்பட பல முறைகேடுகளில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. கடந்த இரண்டு மாதங்களாக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே ஸ்வப்னாவும் சரித்குமாரும் சேர்ந்து வெளிநாடுகளில் தொழில் நடத்தும் கேரளாவில் உள்ள பல முக்கிய பிரமுகர்களுக்காக இங்கிருந்து துபாய் உள்பட நாடுகளுக்கு லட்சக்கணக்கில் டாலர்களை கடத்த உதவியதும் கண்டுபிடிக்கப்பட்டது. யார், யாருக்காக டாலர்களை வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டது என்பது குறித்த விவரங்களை இருவரும் சுங்க இலாகாவிடம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு, சுங்க இலாகா மற்றும் மத்திய அமலாக்கத் துறை ஆகியவை விசாரணை நடத்தி வருகிறது.

இதில் பல முக்கிய அரசியல் பிரமுகர்களின் பெயர்களும் இருந்ததால் இருவரையும் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரகசிய வாக்குமூலம் பெற சுங்க இலாகா தீர்மானித்தது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஸ்வப்னாவும், சரித்குமாரும் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்றத்தில் வெளிநாட்டுக்கு டாலர் கடத்திய சில முக்கிய பிரமுகர்களின் பெயர்களை இருவரும் கூறினர். இதில் ஒருவர் கேரள சபாநாயகர் ஸ்ரீராமகிருஷ்ணன் என தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்த சுங்க இலாகா தீர்மானித்துள்ளது. விரைவில் கொச்சியில் உள்ள சுங்க இலாகா அலுவலகத்தில் ஆஜராக கூறி அவருக்கு நோட்டீஸ் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு டாலர் கடத்தியதாக சபாநாயகர் மீது புகார் கூறப்பட்டுள்ளது கேரள அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சபாநாயகரிடம் விசாரணை நடத்தப்பட்டால் அது கேரள அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

More India News


அண்மைய செய்திகள்