கேரளாவில் 10 மாதங்களுக்குப் பின்னர் 10 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் தொடங்கின. ஆனால் கேரளாவில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் வகுப்புகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்பட்டது. கல்லூரிகள் வரும் 4ம் தேதி முதல் திறக்கப்படுகின்றன. கொரோனா பரவல் காரணமாக கேரளாவிலும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த ஜூன் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. ஆன்லைனிலேயே தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஜனவரி 1 முதல் வகுப்புகளை தொடங்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும் இந்த வகுப்புகளுக்கு மார்ச் 17ம் தேதி பொதுத் தேர்வுகளை தொடங்கவும் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று முதல் கேரளாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கின. தற்போது கொரோனா பரவல் அதிகளவில் இருப்பதால் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மட்டுமே மாணவர்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பெற்றோர் சம்மதத்துடன் மட்டுமே பள்ளிக்கு வரவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இன்று பெரும்பாலான பள்ளிகளில் மிகவும் குறைவான எண்ணிக்கையிலேயே மாணவர்கள் வகுப்புகளுக்கு வந்திருந்தனர்.
பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் முதலில் கவுன்சிலிங் நடத்தினர். பொதுத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தேர்வுகளை எப்படி எழுத வேண்டும் என்ற அறிவுரைகளும் வழங்கப்பட்டன. ஒரு பெஞ்சில் அதிகபட்சமாக இரண்டு மாணவர்கள் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். இரண்டு ஷிப்டுகளாக வகுப்புகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களுக்குள் எந்த பொருட்களையும் பரிமாறக் கூடாது என்றும், கட்டிப்பிடிக்கவோ கை கொடுக்கவோ கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே வரும் 4 தேதி முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கும், முதுகலை படிக்கும் மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.