புதுவருடத்தில் மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இந்தியாவில் முதன்முதலாக கொரோனா தடுப்பூசி பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விரைவில் தடுப்பூசி வினியோகம் தொடங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பணிகள் துரிதகதியில் நடந்து வந்தது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அஸ்ட்ராசெனக்காவும் சேர்ந்து உருவாக்கிய சிரம் இன்ஸ்டியூட் தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்துக் கட்டுப்பாட்டு துறை இன்று அனுமதி அளித்துள்ளது. பாரத் பயோடெக் உள்பட மற்ற இரண்டு நிறுவனங்களின் தடுப்பூசி குறித்த ஆய்வுப் பணிகள் இன்னும் முடிவடையவில்லை.
கோவிஷீல்டு தடுப்பூசிக்கு 62 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை பலன் கிடைத்துள்ளது. இங்கிலாந்து, பிரேசில் ஆகிய நாடுகளில் நடந்த சோதனையில் இது தெரியவந்துள்ளது. இதற்கிடையே நாளை தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் 3 மையங்களில் இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மையத்திலும் ஒரு சுகாதாரத் துறை அதிகாரி தலைமையில் 25 ஊழியர்கள் இந்த ஒத்திகையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மத்திய சுகாதாரத் துறையின் அறிவுரைப்படி இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது. தடுப்பூசி போடுவதற்காக நாடு முழுவதும் 96 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு 104 என்ற தொலைபேசி எண்ணிலும், 1075 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். முன்னுரிமை பட்டியலில் உள்ள 30 கோடி பேருக்கு முதலில் தடுப்பூசி போடப்படும். இவர்களிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. டாக்டர்கள், நர்சுகள் உள்பட சுகாதாரத் துறையினர், துப்புரவு தொழிலாளிகள், நகராட்சி ஊழியர்கள், காவல் துறை, ஊர்க்காவல் படையினர், 50 வயதுக்கு மேல் ஆனவர்கள், 50 வயதுக்கு கீழ் உள்ள வேறு நோய்கள் இருப்பவர்கள் ஆகியோர் இந்த முன்னுரிமை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். தடுப்பூசிக்கான கட்டணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.