என்னுடைய உடலை விற்று பாக்கியை வசூலித்துக் கொள்ளுங்கள்... தற்கொலை செய்த விவசாயி மோடிக்கு கடிதம்...!

by Nishanth, Jan 2, 2021, 11:47 AM IST

கொரோனா காலத்தில் மின் கட்டணத்தைக் கட்ட முடியாததால் விவசாயியின் பொருட்களை மின் நிறுவனம் ஜப்தி செய்ததால் மனமுடைந்த மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், என்னுடைய உடல் பாகங்களை விற்று பாக்கி தொகையை எடுத்துக் கொள்ளுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.சாதாரண ஒரு குடிமகன் மின் கட்டணத்தைக் கட்டுவதற்கு ஒரு நாள் தாமதம் ஆனால் கூட அடுத்த நாளே மின்வாரிய அதிகாரிகள் வீட்டுக்கு வந்து பியூசை பிடுங்கி விட்டுச் செல்வது வழக்கம்.

ஆனால் நாடு முழுவதும் பெரிய, பெரிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் பாக்கி வைத்திருந்தாலும் மின்வாரியம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. காலம்காலமாக இதுதொடர்பாக புகார் கூறப்பட்டு வருகிறது. இதேபோல வங்கிகளில் கடன் வாங்கினால் சாதாரண அடித்தட்டு மக்கள் என்றால் ஒரு சட்டமும், பெரிய நிறுவனங்கள் என்றால் வேறு சட்டமும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்கள் கடன் வாங்கி கட்டாமல் இருந்தால் அவர்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. ஆனால் ஏழை மக்கள் கடன் வாங்கினால் அவரது வீடு மற்றும் உடமைகள் ஜப்தி செய்யப்படுகின்றன. இந்த பரிதாப நிலை தற்போதும் இந்தியாவில் தொடர்ந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஒரு ஏழை விவசாயியால் மின் கட்டணத்தைக் கட்ட முடியாததால் அவரது மில், இரு சக்கர வாகனம் மற்றும் பொருட்களை மின் நிறுவனம் ஜப்தி செய்தது. இதனால் மனமுடைந்த அந்த விவசாயி பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலம் சதர்பூர் மாவட்டத்தில் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இப்பகுதியைச் சேர்ந்தவர் முனேந்திர ராஜ்புத் (35). விவசாயம் செய்து வந்தார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் உட்பட நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர் அப்பகுதியில் மில் ஒன்றையும் நடத்தி வந்தார். இந்நிலையில் கொரோனா காரணமாகக் கடந்த சில மாதங்களாக இவருக்கு விவசாயத்தில் கடும் நஷ்டம் ஏற்பட்டது. மேலும் மில்லும் சரியாக ஓடவில்லை. இதனால் இவருக்கு மின் கட்டண பாக்கியான 87 ஆயிரத்தைக் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் கட்டணத்தைக் கட்டாததால் கடந்த சில தினங்களுக்கு முன் மின் நிறுவனம் ராஜ்புத்தின் மில்லை பூட்டி சீல் வைத்தது. மேலும் அவரது இருசக்கர வாகனம் மற்றும் பொருட்களை ஜப்தி செய்தது. இதனால் ராஜ்புத் கடும் மனவேதனையில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன் அவர் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது: அரசியல்வாதிகளும், பெரும் தொழிலதிபர்களும் பாக்கி பணத்தைக் கட்டாமல் இருந்தால் அரசு அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. முதலாளிகள் கடன் வாங்கினால் கடனை திருப்பிக் கட்ட அவர்களுக்கு போதிய கால அவகாசம் கொடுக்கின்றனர். மேலும் அவரது கடன்களைத் தள்ளுபடியும் செய்கின்றனர். ஆனால் ஒரு சாதாரண மனிதன் சிறிய தொகை கட்டாமல் விட்டால் கூட அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதற்கு என்ன காரணம் என்று விளக்கம் கூட கேட்பதில்லை.

கொரோனா காரணமாக என்னால் பாக்கி தொகையைக் கட்ட முடியவில்லை. சிறிது கால அவகாசம் தந்திருந்தால் நான் அந்த தொகையைக் கட்டி இருப்பேன். என்னால் எனது குழந்தைகளைக் காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என்னுடைய உடல் பாகங்களை விற்று பாக்கி தொகை எடுத்துக் கொள்ளவும். இவ்வாறு அந்த கடிதத்தில் ராஜ்புத் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading என்னுடைய உடலை விற்று பாக்கியை வசூலித்துக் கொள்ளுங்கள்... தற்கொலை செய்த விவசாயி மோடிக்கு கடிதம்...! Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை