இந்தியாவில் கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் இலவசமாகப் போடப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் கூறியுள்ளார்.இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் சிரம் இன்ஸ்டிடியூட் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை நேற்று அனுமதி வழங்கியது. இதையடுத்து மிக விரைவில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அசாம், பஞ்சாப் உள்பட நான்கு மாநிலங்களில் தடுப்பூசிக்கான ஒத்திகை பார்க்கப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இதற்கான ஒத்திகை பார்க்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் 4 மாவட்டங்களில் இந்த ஒத்திகை நடைபெற்று வருகிறது. டெல்லி ஜிடிபி மருத்துவமனையில் நடந்த தடுப்பூசி ஒத்திகையைப் பார்வையிடுதற்காக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் சென்றிருந்தார். ஒத்திகையை ஆய்வு செய்த பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியது: அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசிக்கான ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.
டெல்லியில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாகவே போடப்படும். இன்று அனைத்து மாநிலங்களிலும் ஒத்திகை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. தடுப்பூசி கொடுப்பதைத் தவிர மீதமுள்ள எல்லா நடவடிக்கைகளும் சரியான முறையில் நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 19,078 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 22,926 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 224 பேர் மரணமடைந்தனர். தற்போது இந்தியாவில் ஒரு கோடியே 3 லட்சத்து 5 ஆயிரத்து 788 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தற்போது 2 லட்சத்து 50 ஆயிரத்து 183 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 99 லட்சத்து 6 ஆயிரத்து 387 பேர் குணமடைந்துள்ளனர். 1,49,218 பேர் மரணமடைந்தனர்.