கேரளாவில் கொரோனா பரவலை தொடர்ந்து மூடப்பட்ட கல்லூரிகள் 9 மாதங்களுக்குப் பின்னர் இன்று திறக்கப்பட்டன. கலைக் கல்லூரிகளில் இளங்கலை இறுதி ஆண்டு மற்றும் முதுகலை மாணவர்களுக்கும், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் மூன்று மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கும் இன்று முதல் வகுப்புகள் தொடங்கின. கொரோனா பரவல் காரணமாக கேரளாவிலும் கடந்த வருடம் மார்ச் முதல் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் கடந்த ஜூன் முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆன்லைனிலேயே தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டன.
இந்நிலையில் 10 மற்றும் 12ம் வகுப்புக்கான அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 17ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகளை தொடங்க தீர்மானிக்கப்பட்டது. இதன்படி கடந்த 1ம் தேதி முதல் கடும் கொரோனா நிபந்தனைகளுடன் 10 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. தினமும் காலை, மதியம் என இரண்டு ஷிப்டுகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒரு பெஞ்சில் ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இன்று முதல் கேரளாவில் கல்லூரிகளையும் திறக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன்படி இன்று காலை கேரளாவில் கல்லூரிகள் திறக்கப்பட்டன.
அறிவியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் இளங்கலை இறுதி ஆண்டு மற்றும் முதுகலை மாணவர்களுக்கும், பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் மூன்று மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்கள், முதுகலை மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை 2 ஷிப்டுகளில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு ஷிப்டுக்கும் அதிகபட்சமாக 5 மணிநேரம் வரை வகுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரிகளில் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று கேரள உயர் கல்வித்துறை அனைத்து கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது. கல்லூரிகளைப் போலவே இன்று முதல் கேரளாவில் பாலிடெக்னிக்குகளும் திறக்கப்பட்டுள்ளன.