உத்தரப்பிரதேசத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்திற்கு முன்னாள் நீதிபதிகள், ஐ.ஏ.எஸ், ராணுவ அதிகாரிகள் 300 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீப காலமாக, பாஜக ஆளும் மாநிலங்களில் சட்டவிரோத மதமாற்றத் தடைச் சட்டம் என்ற சட்டம் கொண்டு வரப்படுகிறது. லவ் ஜிகாத் என்ற பெயரில் பலர் காதல் திருமணம் செய்து, முஸ்லிம் மதத்திற்கு கட்டாயமாக மாற்றப்படுகிறார்கள் என்று பாஜக குற்றம்சாட்டுகிறது. உ.பி.யில் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முன்னாள் நீதிபதிகள், முன்னாள் ராணுவ மேஜர்கள், முன்னாள் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இணைந்து முதல்வருக்கு ஒரு கடிதம் அனுப்பினர். அதில், அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணாக இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், தனிமனித உரிமைகளை தடை செய்கிறது என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து, 14 முன்னாள் நீதிபதிகள், 92 முன்னாள் மேஜர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகள் உள்பட 224 பேர் சேர்ந்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்கள் அந்தச் சட்டத்தை ஆதரித்து கருத்து கூறியுள்ளனர்.
நாட்டின் கலாச்சாரத்தைக் காப்பதற்கு கொண்டு வரப்படும் இந்தச் சட்டம் குறித்து தவறான கருத்து பரப்பப்படுகிறது. மதரீதியான சுதந்திரம் எல்லோருக்கும் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அதே சமயம் கட்டாய மதமாற்றங்களை அனுமதிக்க முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். உ.பி. சட்டவிரோத மதமாற்றதத் தடைச் சட்டத்தின்படி, ஒருவர் வேற்று மதத்தினரை திருமணம் செய்ய வேண்டுமெனில் அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். திருமணத்திற்காக கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டால், 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.