இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்.. பிரதமர் ஜான்சன் அறிவிப்பு..

by எஸ். எம். கணபதி, Jan 5, 2021, 09:17 AM IST

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால், மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் நாடுகளில்தான் அதிகமானோருக்கு தொற்று பாதித்திருக்கிறது. தற்போது கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டில் கொரோனா தொற்று உருமாறி, புதிய வகை கொரோனா வைரஸ் உருவெடுத்துள்ளது.

இது பழைய கொரோனா தொற்றை விட வேகமாக பரவுகிறது. இதையடுத்து, இங்கிலாந்து நாட்டில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. அதை நாம் அனைவரும் இணைந்து கட்டுப்படுத்தி வருகிறோம். தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் நோய் பரவத் தொடங்கியுள்ளது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. தற்போது மருத்துவமனைகளில் 27 ஆயிரம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

இது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்ததை விட 40 சதவிகிதம் அதிகமாகும். இறப்பும் 20 சதவிகிதம் அதிகரித்துள்ளது. எனவே, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து உள்பட இங்கிலாந்து முழுவதும் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்படுகிறது. மக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வர வேண்டும். விளையாட்டு, பொழுதுபோக்கு உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும். எனினும், ஷாப்பிங், பள்ளி, கல்லூரிகள் கொரோனா விதிமுறைகளுடன் செயல்படும். இவ்வாறு போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

You'r reading இங்கிலாந்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்.. பிரதமர் ஜான்சன் அறிவிப்பு.. Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை