பிரபல மலையாள நடிகை அஹானா கிருஷ்ணாவின் வீட்டுக்குள் இரவில் அத்துமீறி நுழைய முயற்சித்தது தீவிரவாதியா என்பது குறித்து போலீசார் விசாரிக்க வேண்டும் என்று கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கிருஷ்ண குமார். இவர் மலையாளம் மட்டுமல்லாமல் தமிழில் தெய்வ திருமகள், முகமூடி, சத்தியம் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவரது மகள் அஹானா கிருஷ்ணா. இவர், ஞான் ஸ்டீவ் லோப்பஸ், லூக்கா, பதினெட்டாம்படி உள்பட பல மலையாள படங்களில் நாயகியாக நடித்துள்ளார். இவரது வீடு திருவனந்தபுரம் சாஸ்தமங்கலம் அருகே உள்ள மருதம்குழி என்ற இடத்தில் உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் இவரது வீட்டு கேட்டை தாண்டி ஒரு வாலிபர் உள்ளே நுழைந்தார். சத்தத்தைக் கேட்டு நடிகர் கிருஷ்ண குமார் வெளியே வந்து பார்த்த போது ஒரு மர்ம நபர் வீட்டின் வராண்டாவில் நின்று கொண்டிருந்தார். திடுக்கிட்ட நடிகர் கிருஷ்ண குமார், அந்த நபரிடம் விசாரித்த போது தனக்கு நடிகை அஹானா கிருஷ்ணாவை பார்க்கவேண்டும் என்று கூறியுள்ளார். இரவு நேரம் என்பதால் பார்க்க அனுமதிக்க கூடாது என்று கிருஷ்ண குமார் கூறினார். ஆனால் அதை கேட்காமல் அந்த வாலிபர் கடும் ரகளையில் ஈடுபட்டார். வீட்டு கதவை திறந்து உள்ளே நுழைய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கிருஷ்ண குமார் இதுகுறித்து போலீசுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து சென்று அந்த வாலிபரை கைது செய்து விசாரித்தனர். இதில் அவர் கேரள மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த பசுலுல் அக்பர் (27) என தெரியவந்தது. இந்த நபர் எதற்காக நடிகையின் வீட்டில் அத்துமீறி நுழைய முயன்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் அவர் போலீசிடம் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெற முடியாததால் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளின் பங்கு இருக்கலாம் என்று பாஜக தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரன் கூறியது: நடிகர் கிருஷ்ண குமார் பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.
இதனால் சமீப காலமாக சமூக இணையதளங்களில் பலமுறை அவருக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. எனவே இந்த சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. எனவே போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். நடிகர் கிருஷ்ண குமார் கூறுகையில், எனக்கு இதற்கு முன்பு பலமுறை சமூக இணையதளங்களில் மிரட்டல்கள் வந்துள்ளன. இந்த சம்பவத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இரவில் அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயற்சித்தது மோசமான சம்பவம் ஆகும். இது குறித்து போலீசார் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கூறினார்.