சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு அனுமதி.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு..

by எஸ். எம். கணபதி, Jan 5, 2021, 13:57 PM IST

மத்திய அரசின் ரூ20 ஆயிரம் கோடி சென்ட்ரல் விஸ்டா திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. புதுடெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்றக் கட்டிடம் ஆங்கிலேயர் ஆட்சியில் 1927ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது அந்த வளாகம் போதுமான வசதிகளை கொண்டிருக்கவில்லை. இதையடுத்து, நாடாளுமன்ற வளாகம், பிரதமர் மற்றும் அரசு தலைமை அலுவலகங்கள் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்து சென்ட்ரல் விஸ்டா திட்டம் என்ற பெயரில் ரூ.20 ஆயிரம் கோடியில் புதிய கட்டுமானங்களை கட்டுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டது. இதில் ஒரு பகுதியாக, ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கும் அரசு திட்டமிட்டது.

இதற்காக, ஏராளமான மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுச்சூழல் உள்பட பல காரணங்களை கூறி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கட்டுமானப் பணிக்கு தடை விதித்தாலும் பூமி பூஜை நடத்த அனுமதித்தது. இதையடுத்து, பிரதமர் மோடி புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்நிலையில், மத்திய அரசின் சென்ரல் விஸ்டா திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் இன்று அனுமதி அளித்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசுக்கு அனுமதி அளித்தது. எனினும், பாரம்பரியச் சின்னங்கள் பாதுகாப்பு கமிட்டியின் ஒப்புதல் பெற்ற பின்பே திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

மேலும், திட்டம் செயல்படுத்தும் போது தூசி, புழுதி வெளியேறாமல் தடுப்பதற்கு புகைக் கூண்டு டவர்களை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளது. புதுடெல்லியின் மையப்பகுதியில் ஜனாதிபதி மாளிகையில் இருந்து இந்தியா கேட் வரை உள்ள 4 கி.மீ. பகுதியில் சென்ட்ரல் விஸ்டா திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. கொரோனா காலத்தில் மக்கள் பசிப்பிணியால் பாதிக்கப்பட்டிருக்கும் போது ரூ.20 ஆயிரம் கோடி திட்டத்திற்கு இப்போது என்ன அவசரம்? என்று காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனம் செய்திருந்தன. எனினும், மோடி அரசு அவற்றை பொருட்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More India News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை