கோயில்களில் தாக்குதல்.. திட்டமிட்ட அரசியல் சதி.. ஜெகன்மோகன் குற்றச்சாட்டு..

by எஸ். எம். கணபதி, Jan 6, 2021, 09:33 AM IST

கோயில் சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் திட்டமிட்டு, ஒரு அரசியல் கொரில்லா போர் நடக்கிறது என்று ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறைமுகமாக பாஜகவை தாக்கியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த வாரம், விஜயநகரத்தில் 400 ஆண்டு பழமைவாய்ந்த ராமர்தீர்த்தம் கோயிலில் இருந்த ராமர் சிலை உடைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக, விஜயவாடாவில் நேரு பஸ் நிலையம் அருகே சீதா தேவி சிலை உடைந்து காணப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேர் தீ வைக்கப்பட்டு எரிந்தது.

கோயில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்களில் ஜெகன் அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, பாஜகவும், அதன் கூட்டணி கட்சியான ஜனசேனாவும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், போலீஸ் மாநாட்டில் முதல்வர் ஜெகன் மோகன் பேசியதாவது: ஆந்திராவில் தற்போது கோயில் சிலைகளை சேதப்படுத்துவதன் மூலம் திட்டமிட்டு, ஒரு புதிய மாடல் அரசியல் கொரில்லா போர் நடக்கிறது. அரசியல் உள்நோக்கத்துடன் கோயில்களும், சிலைகளும் சேதப்படுத்தப்படுகின்றன. ஆள் அரவமில்லாத பகுதிகளில் உள்ள கோயில்களில் சிலைகள் சேதப்படுத்தப்படுகின்றன. அதன்பின்பு, சில எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன.

அதை சில மஞ்சள் பத்திரிகைகள் பூதாகரமாக்கி செய்தி வெளியிடுகின்றன.
சிலர் கடவுளின் பெயரால் அரசியல் செய்கிறார்கள். அவர்களுக்கு கடவுளின் மீதும், பக்தியின் மீதும் எந்த பயமும் கிடையாது. அவர்கள் மனிதத்தன்மை அற்றவர்கள்.
இவ்வாறு ஜெகன்மோகன் பேசினார். பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கோயில்கள் தாக்கப்பட்டால் யாருக்கு லாபம்? எந்த கட்சிக்கு அரசியல்ரீதியாக லாபம் கிடைக்கும்? திட்டமிட்டு தாக்குதல் நடப்பதற்கு என்ன காரணம்? இந்த சம்பவங்களை குறிப்பிட்டு போலி பிரச்சாரங்களை மேற்கொள்வது யார்? அரசின் நல்ல திட்டங்களை மறைத்து, அரசுக்கு களங்கம் விளைவிப்பது யார்? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

You'r reading கோயில்களில் தாக்குதல்.. திட்டமிட்ட அரசியல் சதி.. ஜெகன்மோகன் குற்றச்சாட்டு.. Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை