ஜன.26ல் டிராக்டர் பேரணி.. வீட்டுக்கு ஒருவரை அனுப்ப விவசாயிகள் வலியுறுத்தல்..

by எஸ். எம். கணபதி, Jan 6, 2021, 09:48 AM IST

டெல்லியை நோக்கி ஜன.26ம் தேதி டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக ஹரியானாவில் உள்ள விவசாயிகளிடம் வீட்டுக்கு ஒருவரை அனுப்புமாறு வலியுறுத்தவுள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.6) 42வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 40 விவசாயச் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட அமைச்சர்கள் நடத்திய பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளும் தோல்வியுற்றன.

கடைசியாக, நேற்று முன் தினம்(ஜன.4) மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டவில்லை. வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவது, குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் கொண்டு வருவது ஆகிய கோரிக்கைகளில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். இந்நிலையில், இன்று(ஜன.6) டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், டெல்லியில் நேற்று முதல் மழை பெய்து வருவதால், இந்த பேரணியை நாளைக்கு(ஜன.7) ஒத்தி வைத்துள்ளனர். இது குறித்து சம்யுக்த் கிஷான் மோர்ச்சா நிர்வாகிகள் கூறுகையில், கன்ட்லி-மானேசர்-பல்வால் பைபாஸ் சாலையில் நாளை காலை 11 மணிக்கு பேரணி தொடங்கும்.

இதில் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உ.பி. விவசாயிகள் பங்கேற்பார்கள் என்றனர். மேலும், ஜன.26ம் தேதியன்று டெல்லியை நோக்கி பெரிய அளவில் டிராக்டர் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து சுவராஜ் அபியான் தலைவர் யோகேந்திர யாதவ் கூறுகையில், வரும் 26ம் தேதி நடைபெறும் டிராக்டர் பேரணிக்கு ஹரியானாவில் உள்ள விவசாயிகள், வீட்டுக்கு ஒருவர் வீதம் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்துவோம். விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் நாளை முதல் விவசாயிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று இதை வலியுறுத்துவார்கள் என்றார்.

You'r reading ஜன.26ல் டிராக்டர் பேரணி.. வீட்டுக்கு ஒருவரை அனுப்ப விவசாயிகள் வலியுறுத்தல்.. Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை