இந்தியாவில் புகை பிடிப்பவர்கள் வயதை 21 ஆக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்கள் திருத்த மசோதா 2020 என்கிற வரைவு மசோதாவை மத்திய சுகாதார அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இந்த திருத்த மசோதாவில் புகையிலைப் பொருட்கள் விளம்பரம், வர்த்தகம் முறைப்படுத்துதல், உற்பத்தி, விநியோகம் மற்றும் பகிர்வு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படவுள்ளது.
புகையிலை திருத்த மசோதாவின் மூலம் ஏற்கனவே உள்ள சட்டத்தின் உட்பிரிவில் 6 திருத்தங்கள் செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி, புகைப்பிடிப்பவர்களின் வயதை 18 லிருந்து 21 ஆக அதிகரிக்கப்படுகிறது. 21 வயதிற்கு குறைந்தவர்களுக்கு புகையிலை விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுபவர்களுக்கு அபராதம் மற்றும் சிறைதண்டனை விதிக்கப்படும்.
பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை 200 லிருந்து 2000 ஆயிரமாக உயர்த்தவும் மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. வயது குறைந்த நபர்களுக்கு சட்டத்தை மீறி சிகரெட் விற்பனை செய்யப்பவர்களுக்கு, தண்டனை காலம் 2 ஆண்டுகளில் இருந்து 7 ஆண்டாக உயர்த்தவும், அபராத தொகையை 1000 லிருந்து ஒரு லட்சம் உயர்த்தவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
சில்லறை விலையில் சிகெரட் விற்பனை செய்யப்படுவதால், சிகெரட் பாக்கெட் மேல் உள்ள விழிப்புணர்வு அவர்களின் கவனத்திற்கு செல்வதில்லை. எனவே, சிகரெட்டை சில்லறை விலையில் விற்பனைக்கு தடை செய்யப்படுகிறது. புகையிலை பொருட்கள் தொடர்பான வரைவு மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.