அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்து அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளைப் பதிவிட்டு வருவதால் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் கணக்குகளை ட்விட்டரும் ஃபேஸ்புக்கும் தற்காலிகமாக முடக்கி வைத்துள்ளன. அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்ற தற்போதைய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், தேர்தல் முறைகேட்டின் மூலமாகவே ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார் என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் அருகே டிரம்பின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்ணொருவர் கொல்லப்பட்டார். ஜோ பைடனை அமெரிக்க ஜனாதிபதியாக நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று கலவரக்காரர்கள் கூறுகின்றனர். இந்தக் கலவரத்தின் காரணமாக டொனால்டு டிர்ம்பின் கணக்குகளைச் சமூகவலைத்தள நிறுவனங்கள் முடக்கியுள்ளன.
"வாஷிங்டன் டி.சியில் நடைபெற்று வரும் இதுவரை இல்லாத அளவான வன்முறையின் காரணமாக" என்று கருத்து தெரிவித்து, ட்விட்டர் நிறுவனம் டிரம்பின் மூன்று பதிவுகளை நீக்கியுள்ளது. தற்போது 12 மணி நேரத்திற்கு ட்விட்டர் அவரது கணக்கைத் தற்காலிகமாக முடக்கியுள்ளது. டிரம்ப் தமது பதிவுகளை அழிக்காவிட்டால், அவரது ட்விட்டர் கணக்கு தொடர்ந்து முடக்கப்பட்டிருக்கும் என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது. தங்கள் நிறுவனத்தின் இரண்டு கொள்கைகளை டிரம்பின் பதிவுகள் மீறியிருப்பதாகக் கூறி ஃபேஸ்புக் டிரம்பின் முகநூல் பக்கத்தை 24 மணி நேரத்திற்கு முடக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் மோசடியானது என்று கூறி டிரம்ப் பதிவிட்டிருந்த வீடியோவை யூடியூப் நீக்கியுள்ளது. இதேபோன்ற வீடியோவை நீக்கியுள்ள இன்ஸ்டாகிராம், டிரம்பின் இன்ஸ்டாகிராம் கணக்கை 24 மணி நேரத்திற்கு முடக்கியுள்ளது.