தியேட்டரில் 100 சதவீதம் டிக்கெட் அனுமதி ரத்தாகுமா? மாஸ்டர், ஈஸ்வரன் வெளியாவதில் சிக்கல்..

by Chandru, Jan 7, 2021, 12:07 PM IST

கொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் கடந்த 8 மாதமாக மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வில் தியேட்டர்களை திறக்க கேட்டு தியேட்டர் உரிமையாளர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்து வந்தனர். தியேட்டர்கள் மூடப்பட்டதால் 2 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தியேட்டர் அதிபர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதையடுத்து மருத்துவக் குழுவுடன் அரசு ஆலோசனை நடத்திய பிறகு கடந்த நவம்பர் மாதம் 50 சதவீத டிக்கெட் அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது.

50 சதவீத அனுமதி என்றதால் மாஸ்டர் போன்ற படங்கள் ரிலீஸ் செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. 100 சதவீத அனுமதி கேட்டு தியேட்டர்கள் தரப்பில் மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டது, நடிகர் விஜய் தமிழக முதல் வரை நேரில் சந்தித்து இதற்கு அனுமதி கேட்டார். நடிகை குஷ்பு, நடிகர் சிம்பு போன்றவர்களும் 100 சதவீத டிக்கெட் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் பொங்கல் முதல் 100 சதவீத டிக்கெட் அனுமதியை அரசு வழங்கியது. அதற்கு நடிகர், நடிகைகள் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர்.

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் 13ம் தேதி வெளியாகிறது அன்று முதல் 100 சதவீதம் டிக்கெட்டுடன் படங்கள் வெளியாகிறது மறுநாள் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில் 100 சதவீத அனுமதியை விட 50 சதவீத அனுமதியே மேல் என்று நடிகர் அரவிந்த்சாமி நேற்று கருத்து தெரிவித்தார். அவரது கருத்துக்கு விஜய் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அடுத்து டாக்டர்கள் சங்கம் 100 சதவீத டிக்கெட் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது நெட்டில் வைரலானது. இதுகுறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் ஜி ஆர். ரவீந்திர நாத் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியதாவது:திரைத் துறையினரின் அழுத்தத்தால் , தமிழக அரசு திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகளிலும் பார்வையாளர்கள் அமர அனுமதி வழங்கியுள்ளது.

கொரோனா பரவும் ஆபத்தைக் கருத்தில் கொள்ளாமல் , 70 விழுக்காடு வேகமாகப் பரவும் புதிய உருமாறிய கொரோனா பரவும் காலக் கட்டத்தில் இத்தகைய அனுமதி கொடுத்திருப்பது பொது மக்களின் நலன்களுக்கு எதிரானது. இது மக்களின் உயிரோடு விளையாடும் செயலாகும்.தனிநபர் இடைவெளியை பராமரிக்க வேண்டும், கூட்டம் உள்ள இடங்களைத் தவிர்க்க வேண்டும், மூடிய காற்றோட்டம் இல்லாத இடங்களைத் தவிர்க்க வேண்டும் என உலக நல நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசும் இதை அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழக அரசு இத்தகைய முடிவை எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

பொதுமக்களின் உயிரைவிடத் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பொருளாதார நலனை முக்கியமானதாகத் தமிழக அரசு கருதுவது வியப்பைத் தருகிறது. கடந்த எட்டு மாதங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் குணப்படுத்திடவும், கொரோனா பரவலை தடுத்திடவும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை பணியாளர்கள் மிகக் கடுமையாக உழைத்துள்ளனர்.பல்வேறு இன்னல்களை அனுபவித்துள்ளனர். பலர் உயிரையும் தியாகம் செய்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பரவும் வகையில் அரசு செயல்படுவது, மருத்துவ பணியாளர்களையும், முன்களப் பணியாளர்களையும் இழிவு படுத்தும் செயலாகும்.கொரோனாவால் பொருளாதார பாதிப்புக்கு உள்ளான திரைத் துறையினருக்கு இழப்பீடு வழங்கலாமே ஒழிய, அவர்கள் நலன் காத்தல் என்ற பெயரில் கொரோனாவை பரப்ப வழி வகுத்தல் சரியல்ல. அறிவார்ந்த செயலாகாது.

எனவே,தமிழக அரசு இந்த முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும். திரைத் துறையினரும் சமூகப் பொறுப்போடு செயல்பட வேண்டும்.தங்களது ரசிகர்களும், அவர்களின் குடும்பங்களும் கொரோனாவால் பாதிக்காமல் காக்கும் கடமை முன்னணி திரை நட்சத்திரங்களுக்கும், கலைஞர்களுக்கும் உள்ளது.அக்கடமையை அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா விதிமுறைகளை ஜனவரி 31ம் தேதி வரை கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநில அரசுக்குக் கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொங்கலையொட்டி தியேட்டர்களுக்கு 100 சதவீத சினிமா டிக்கெட் அனுமதி அளித்தது பல தரப்பில் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. இதையடுத்து அந்த உத்தரவை அரசு ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக பரபரப்பு எழுந்துள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தற்போது தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் சென்னை வந்த பிறகே இதுபற்றி முடிவு தெரியும் என்று கூறப்படுகிறது.50 சதவீத டிக்கெட் அனுமதியென்றால் பொங்கலுக்கு அறிவிக்கப்பட்ட மாஸ்டர், ஈஸ்வரன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

More Cinema News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>


READ MORE ABOUT :

அதிகம் படித்தவை