40 வருடத்துக்கு பிறகு ஹீரோ ஆகும் காமெடி நடிகர் ..

by Chandru, Jan 7, 2021, 14:22 PM IST

நகைச்சுசுவை நடிகர்கள் அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை சினிமாவுக்கு பெரும் உந்து சக்தியாகவும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருந்து வந்திருக்கிறார்கள். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்பதுபோல் நகைச்சுவை இல்லாத படங்கள் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. என்.எஸ்.கிருஷ்ணன் பகுத்தறிவை தனது நகைச்சுவையில் புகுத்தி மக்களைச் சிரிக்க வைத்துச் சிந்திக்க வைத்தார். சந்திரபாபு, நாகேஷ், தங்க வேலு, சுருளிராஜன் என்று சோலோவாக காமெடியில் கலக்கினார்கள். இவர்களில் நாகேஷ், சந்திரபாபு போன்றவர்கள் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்தனர்.

80, 90களில் கவுண்டமணி, செந்தில் இரட்டையர்கள் காமெடியில் தமிழ் திரையுலகை ஆண்டார்கள். அந்த காலகட்டத்தில் அவர்கள் இல்லாத படமே இல்லை என்றளவுக்கு இருவரின் காமெடியும் கொடி கட்டி பறந்தது. பிறகு விவேக், வடிவேலு, சந்தானம் போன்றவர்கள் காமெடியை கையிலெடுத்து வெற்றி கண்டார்கள். கவுண்டமணி, வடிவேலு ஆகியோர் சில படங்களில் ஹீரோக்களாக நடித்தார்கள். பிறகு மீண்டும் காமெடி வேடங்களில் நடித்தனர். நடிகர் சந்தானம் காமெடி வேடங்களில் நடித்து வந்த நிலையில் திடீரென்று ஹீரோவாக நடிக்க முடிவு செய்து இன்றுவரை ஹீரோவாகவே தொடர்கிறார். இவர்கள் ஹீரோவாக நடித்த நிலையில் செந்தில் மட்டும் ஹீரோவாக நடிக்காமலிருந்து வந்தார். சுமார் 40 வருடம் கழித்து அவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஒரு கிடாயின் கருணை மனு பட இயக்குனர் சுரேஷ் சங்கயா தான் இயக்கும் மூன்றாவது படத்தில் செந்திலை கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். இன்னும் இப்படத்துக்குப் பெயரிடப்படவில்லை. இது கிராமப்புற நய்யாண்டி கதை அமைக்கப்படுகிறது. சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்த பின்னர் தனது கிராமத்திற்குத் திரும்பும் ஆயுள் கால குற்றவாளியாகச் செந்தில் நடிக்கிறார்.இதுகுறித்து படத் தயாரிப்பாளர் சமீர் பாரத் ராம் கூறும்போது செந்திலின் நடிப்புத் திறமையை சினிமாவில் நன்கு பயன் படுத்தப்படவில்லை. மேலும் அவர் இதுவரை முழு நீள ஹீரோவாக பாத்திரத்தை ஏற்றதில்லை. இந்த பாத்திரம் அவருக்குப் பொருந்தும் என்று நாங்கள் உணர்ந்தோம். இது அவரது நடிப்பு வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். முழுநீள கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டு செந்திலை அணுகிய போது அவர் ஆச்சரியப்பட்டார் .

ஆனால் ஸ்கிரிப்ட்டை கேட்டவுடன், அவர் அதை நேசித்தார், உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார்," என்றார் சமீர்.இப்படத்தில் செந்திலுக்கு ஜோடி கிடையாது. பெரும் பாலான கதாபாத்திரங்களுக்கு புதிய முகங்கள் நடிக்க உள்ளனர். இருப்பினும் ஒரு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியின் ஒரு கதாபாத்திரம் உள்ளது, பிரபலமான நடிகரை நடிக்க வைக்க எண்ணி உள்ளனர். சமீர் தயாரிக்கும் இரண்டாவது படமாகச் சத்திய சோதனை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரேம்ஜி அமரன் நடித்தார்.

You'r reading 40 வருடத்துக்கு பிறகு ஹீரோ ஆகும் காமெடி நடிகர் .. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை