அகில இந்திய தலைமையில் 2 நிர்வாகிகளை நீக்கி விஜய் அதிரடி.. கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை..

by Chandru, Jan 7, 2021, 14:54 PM IST

நடிகர் விஜய் பெயரில் தமிழ் நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் வெளிநாடுகளில் ரசிகர் மன்றங்கள் இயங்கி வந்தன. அவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து ரசிகர் மன்றம் என்பதற்குப் பதிலாக அகில இந்தியத் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று 30 வருடத்துக்கும் மேலான எதிர்பார்ப்பு ரஜினி ரசிகர்களிடம் இருந்து வந்தது. வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைந்த கதையாகக் கட்சி தொடங்குவதற்கான தேதி அமைப்பு என எல்லாவற்றையும் உருவாக்கி விட்டு கடைசி நேரத்தில் அரசியலுக்கு வரவில்லை என்னை மன்னித்துவிடுங்கள் என்று கூறி விலகி நிற்கிறார் ரஜினிகாந்த்.

இதற்கிடையில் விஜய்யை அரசியலில் ஈடுபட அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் விஜய் பெயரில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகரன் தேர்தல் ஆணையத்தில் கட்சி தொடங்குவதற்காகப் பெயர் பதிவு செய்ய முடிவு செய்து அதற்கான பணிகளை மேற் கொண்டார். இதைக் கேட்டு ஷாக் ஆன விஜய் உடனடியாக, தனக்கும் தன் தந்தை தொடங்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனது ரசிகர்கள், என் தந்தை தொடங்கும் கட்சியில் இணைவதோ கட்சி பணியாற்றுவதோ கூடாது என்று அறிவித்தார். இது எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் விஜய்க்கும் இடையான மோதல் போக்காகக் கருதப்பட்டது.

இந்நிலையில் தான் தொடங்கிய கட்சியைப் பதிவு செய்ய வேண்டாம் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதினார். சில தினங்களுக்கு முன் எஸ்.ஏ.சி தனது ஆதரவாளர்களை சந்தித்தார். அவர்கள் விஜய் ரசிகர்களின் அதிருப்தி பிரிவு என்று கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அவர்கள் பொங்கலில் கட்சியைத் தொடங்குவது பற்றி விவாதித்ததாக தெரிகிறது. மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறும் போது, கிறிஸ்மஸ் தினத்தன்று விஜய்யைச் சந்தித்ததாகவும், தன்னை கட்டிப்பிடித்து விரலில் மோதிரம் போட்டதாகவும் தெரிவித்தார். இருவரும் தங்களின் மனஸ்தாபங்களை மறந்துவிட்டதாகச் சுட்டிக்காட்டினார். இந்த தகவல் வெளிவட்டங்களில் பரவி மீண்டும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் எஸ்.ஏ.சி.யின் கூற்றுக்களைக் கடுமையாக மறுத்து வருகின்றனர்.

"எஸ்.ஏ.சி கூறியது முற்றிலும் தவறானது. கிறிஸ்துமஸ் சமயத்தில் விஜய் சென்னையிலேயே இல்லை. எனவே எஸ்.ஏ.சி அவரை சந்தித்ததாகக் கூறுவது விந்தையானது. விஜய் நிச்சயமாக எஸ்.ஏ.சி யுடன் இணைந்திருக்கவில்லை. அவர் ஒரு கட்சியை தொடங்க முயற்சிப்பது மற்றும் அவரது ரசிகர்களைத் தவறாக வழிநடத்துவது போன்ற தனது தந்தையின் செயல்களால் விஜய் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார். இதன் காரணமாகவே அவர் கடந்த ஆறு மாதங்களாக தனது தந்தையுடன் பேசுவது கூட இல்லை.

உண்மையில் விஜய் தனது தந்தையின் எண்ணை செல்போனில் பிளாக் செய்து வைத்திருக்கிறார் என்றனர். பொங்கல் நெருக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீண்டும் அரசியல் பரபரப்பு ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில் அகில இந்தியத் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து செயலாளர் ரவிராஜா மற்றும் துணை செயாலாளர் ஏ.சி. குமார் ஆகியோரை நீக்கி அதிரடியாக நடவடிக்கை எடுத்திருக்கிறார் விஜய்.இதுகுறித்து அகில இந்தியத் தலைமை விஜய் மக்கள் இயக்கம் புஸ்ஸி என்.ஆனந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:தளபதி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்குத் தெரிவிப்பது என்னவென்றால், தளபதி விஜய் மக்கள் இயக்க அகில இந்திய செயலாளராகச் செயல்பட்டு வந்த ஆர்.ரவி ராஜா மற்றும் துணை செயலாளராக செயல்பட்டு வந்த ஏ.சி.குமார் ஆகிய இவர்கள் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் கண்ணியத்திற்கும் கட்டுப்பாட்டிற்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டு இருப்பதாலும் இயக்க கட்டுப்பாட்டை மீறி இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவதாலும் மேலும் அனைவரின் ஒற்றுமையைச் சீர்குலைக்கின்ற வகையில் தவறான செய்திகளை பரப்புவதாலும் மேற் கண்ட ரவிராஜா, ஏ.சி.குமார் ஆகிய இருவரையும் இன்று முதல் அவர்கள் வகித்த பதவிகள் உட்பட அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

ஆகவே தளபதி விஜய் மக்கள் மாநில, மாவட்ட. நகர். ஒன்றிய பகுதி மற்றும் கிளை மன்ற நிர்வாகிகள் யாரும் இவர்களுடன் இயக்கம் சம்பந்தப்பட்ட எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு புஸ்ஸி எஸ் ஆனந்த் தெரிவித்துள்ளார்.விஜய்யின் இந்த நடவடிக்கை விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You'r reading அகில இந்திய தலைமையில் 2 நிர்வாகிகளை நீக்கி விஜய் அதிரடி.. கட்டுப்பாட்டை மீறியதால் நடவடிக்கை.. Originally posted on The Subeditor Tamil

More Cinema News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை