வேளாண் சட்டத்தை வாபஸ் பெற மத்திய அரசு மறுத்ததைத் தொடர்ந்து இன்று டெல்லியில் விவசாயிகள் சங்கத்தினருடன் நடந்த 8வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது.மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த 6 வாரங்களுக்கு மேலாக விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் இந்தப் போராட்டம் மத்திய அரசுக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர மத்திய அரசு இதுவரை விவசாயிகள் சங்கத்தினருடன் 7 முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் தான் முடிவடைந்தன. வேளாண் சட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசும், சட்டத்தை வாபஸ் பெறாமல் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என்று விவசாயிகள் சங்கத்தினரும் கூறி வந்ததால் இந்தப் போராட்டம் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்நிலையில் இன்று டெல்லியில் விவசாயிகள் சங்கத்தினருடன் மத்திய அரசு 8வது கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. குறிப்பிட்ட நேரத்தை விட 40 நிமிடங்கள் தாமதமாகத் தான் கூட்டம் தொடங்கியது.
பேச்சுவார்த்தைக்கு முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் தான் மத்திய அமைச்சர்களான நரேந்திர சிங் தோமர் மற்றும் பியுஷ் கோயல் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த வந்தனர். 40 விவசாயிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையிலும் வேளாண் சட்டத்தை வாபஸ் பெற முடியாது என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் விவசாய சங்கத்தினர் அதை ஏற்கவில்லை. இதையடுத்து இந்த 8வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்தது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 15ம் தேதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூன்று சட்டங்களையும் வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக இருப்போம் என்று பேச்சுவார்த்தைக்கு முன்பாக விவசாயிகள் சங்கத்தினர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தனர். சட்டத்தில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று வழக்கம்போல மத்திய அரசு கூறினால் போராட்டத்தைத் தொடருவோம் என்று அவர்கள் கூறினர். குடியரசு தினத்தில் நாங்களும் அணிவகுப்பு நடத்துவோம் என்று அவர்கள் மேலும் கூறினர்.