கொரோனா நெகட்டிவ் ஆனாலும் வீட்டு தனிமைக்கு முன்பாக ஒரு வாரம் அரசு முகாமில் தனிமையில் இருக்க வேண்டும் என்ற டெல்லி அரசின் திடீர் உத்தரவால் இங்கிலாந்திலிருந்து இன்று இந்தியா வந்த பயணிகள் கடும் அவதியடைந்தனர். விமான நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து இந்தியா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, பின்லாந்து உட்பட பல நாடுகள் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்திய விமானங்கள் டிசம்பர் 23ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி (நேற்று) வரை சர்வீசை நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில் தடைக்கு பின்னர் இன்று இங்கிலாந்தில் இருந்து முதல் விமானம் டெல்லிக்கு வந்தது.
இந்த விமானத்தில் 250 பயணிகள் இருந்தனர். டெல்லி பயணிகள் மட்டுமில்லாமல் தமிழ்நாடு, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பயணிகளும் இந்த விமானத்தில் இருந்தனர். இங்கிலாந்திலிருந்து டெல்லி வரும் பயணிகள் கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ஆனால் 7 நாட்கள் அவர்களது வீடுகளில் தனிமையில் இருக்க வேண்டும் என்று டெல்லி அரசு முன்னர் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இன்று திடீரென ஒரு புதிய உத்தரவை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்தார். அதில் கொரோனா நெகட்டிவ் ஆனாலும் 7 நாட்கள் அரசு முகாமில் தனிமையில் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். டெல்லி மக்களை உருமாறிய கொரோனா வைரசிலிருந்து பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
இன்று விமானம் டெல்லியை அடைந்த பின்னர் தான் இந்த விவரம் பயணிகளுக்கு தெரியவந்தது. இங்கிலாந்தில் விமானம் ஏறுவதற்கு முன் கொரோனா பரிசோதனை நடத்தி நெகட்டிவ் ஆனவர்கள் டெல்லியில் இறங்கியவுடன் தங்களது வீடுகளுக்கு சென்று விடலாம் என கருதி வந்த வெளிமாநில பயணிகள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாமால் கடும் அவதியடைந்தனர். கொரோனா நெகட்டிவ் ஆனவர்களும் ஒரு வாரம் டெல்லியில் உள்ள அரசு முகாமில் தனிமையில் இருக்க வேண்டும் என்று விமான நிலையத்திலிருந்த சுகாதார துறை அதிகாரிகள் கூறினர். இதைக் கண்டித்து வெளிமாநில பயணிகள் விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.