நாதுராம் கோட்சே உண்மையான தேசியவாதி என்பதை நிரூபிப்போம் என இந்து மகாசபா தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவின் வாழ்க்கை குறித்து கோட்சே ஞான ஷாலா என்ற நூலகத்தை அகில் பாரதிய இந்து மகாசபா நேற்று மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் திறந்தது. இந்த நூலகம், தவுலத் கஞ்சில் உள்ள மகாசபாவின் அலுவலகத்தில் திறக்கப்பட்டது. மகாத்மா காந்தியின் படுகொலையை கோட்சே எவ்வாறு செய்தார், அவரது கட்டுரைகள் மற்றும் அவரது உரைகள் பற்றிய இலக்கியங்கள் நூலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மகாசபாவின் துணைத் தலைவர் ஜெய்வர் பரத்வாஜ் கூறுகையில், கோட்சே என்ற உண்மையான தேசியவாதியை உலகிற்கு முன்வைக்க நூலகம் திறக்கப்பட்டது. கோட்சே பிரிக்கப்படாத இந்தியாவுக்காக நின்று இறந்தார். இன்றைய அறியாத இளைஞர்களில் கோட்சே நின்ற உண்மையான தேசியவாதத்தை ஊக்குவிப்பதே நூலகத்தின் நோக்கம் என்று தெரிவித்தார். மேலும், மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் முகமது அலி ஜின்னா ஆகியோரின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்காக இந்தியா பிளவுபட்டுள்ளது. இருவரும் ஒரு தேசத்தை ஆள விரும்பினர்; அதேநேரத்தில் கோட்சே அதை எதிர்த்தார் என்று தெரிவித்தார்.
முன்னதாக, மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள மகாசபா அலுவலகத்தில் கோட்சேவுக்கு கோயில் அமைக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து கோயில் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.