இந்தியாவில் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக 10 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி அரசுக்கு ₹ 200க்கு விற்பனை செய்யப்படும் என்றும், வெளிமார்க்கெட்டில் இதன் விலை ₹ 1,000 என்றும் சிரம் இன்ஸ்டியூட் தலைவர் அடர் பூனவாலா தெரிவித்தார். இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், பயோடெக் நிறுவனமும் தயாரித்த கொரோனா தடுப்பூசிகள் விநியோகத்திற்கு தயாராகி விட்டன. இந்தியா முழுவதும் முதல் கட்டமாக 16ம் தேதி முதல் 3 கோடி பேருக்கு இந்த தடுப்பூசி போடப்படுகின்றன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ராசெனக்காவும் சேர்ந்து கண்டுபிடித்த கோவிஷீல்ட் என்ற இந்த தடுப்பூசியை பூனாவிலுள்ள சிரம் இன்ஸ்டியூட் உற்பத்தி செய்கிறது.
கோவிஷீல்ட் தடுப்பூசியை போலவே பாரத் பயோடெக் தயாரித்துள்ள கோவாக்சினுக்கும் இந்தியாவில் அவசர தேவைக்கு பயன்படுத்த ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை பூனாவில் இருந்து நாட்டின் 13 இடங்களுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலங்களும் இந்த தடுப்பூசியை அதற்குரிய சீதோஷ்ண நிலையில் இருப்பு வைத்து வருகின்றன. இந்நிலையில் கோவிஷீல்ட் தடுப்பூசியின் உண்மை விலை என்ன, அரசுக்கு என்ன விலைக்கு கொடுக்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை சிரம் இன்ஸ்டிடியூட் தலைவர் அடர் பூனவாலா தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது: கோவிஷீல்ட் தடுப்பூசியின் உண்மை விலை ₹ 1,000 ஆகும். ஆனால் இந்தியாவில் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்த தடுப்பூசி அரசுக்கு ₹ 200 விலையில் 10 கோடி டோஸ் வழங்கப்படும். அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த மலிவு விலையில் தடுப்பூசி வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு ₹ 1,000 விலையில தடுப்பூசி கொடுக்கப்படும். இந்த தடுப்பூசியை தயாரிப்பதற்காக கடந்த பல மாதங்களாக எங்களது ஊழியர்கள் மிகக் கடுமையாக உழைத்தனர். பல நாடுகள் எங்களது தடுப்பூசியை கேட்டு அணுகியுள்ளனர். ஆப்பிரிக்கா உள்பட பல நாடுகளுக்கு தடுப்பூசியை அனுப்பி வைக்க முயற்சி எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.