இந்திய மக்கள் சோதனை எலிகள் அல்ல - கோவாக்சின் தடுப்பூசி குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து

by SAM ASIR, Jan 13, 2021, 20:58 PM IST

கோவிட்-19 தொற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்து காங்கிரஸ் கட்சி மாற்றுக் கருத்தினை தெரிவித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி கொடுக்கப்பட உள்ள நிலையில், பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் என்ற தடுப்பூசியும் டெல்லி மற்றும் மேலும் 10 நகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் மருத்துவ ஆராய்ச்சியில் இந்தியாவின் திறனுக்கு எடுத்துக்காட்டு என்று கூறப்படுகிறது. ஆனால், கோவாக்சின் தடுப்பூசி இன்னும் மூன்றாம் கட்ட பரிசோதனையை நிறைவு செய்யவில்லை.

ஆகவே, அவசர தேவைக்காக இரண்டாவது தெரிவாகவே அது பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்திய மக்கள் தடுப்பூசியை தெரிவு செய்யும் வாய்ப்பு இல்லை என்று மத்திய சுகாதார துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும் பஞ்சாப் மாநிலத்தின் அனந்த்பூர் சாஹிப் தொகுதி மக்களவை உறுப்பினருமான மணிஷ் திவாரி, பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்குப் பயன்படுத்த பாதுகாப்பானதா?

அதன் பாதுகாப்பு மற்றும் திறன் குறித்து அரசு உத்தரவாதமளிக்க முடியுமா? என்று ஜனவரி 11ம் தேதி, ட்விட்டரில் பதிவிட்டு மத்திய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தனை 'டாக்' செய்திருந்தார். "தடுப்பூசி போட்டுக்கொள்வோர் தங்களுக்கான மருந்தை தெரிவு செய்ய முடியாது என்று அரசு தற்போது கூறுகிறது. கோவாக்சின் தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையை நிறைவு செய்யாத நிலையில் அதன் திறன் குறித்து பல்வேறு கவலைகள் தோன்றுகின்றன. பரிசோதனை முற்றுப்பெறாத தடுப்பூசியை வழங்க முடியாது. இந்திய மக்கள் சோதனை எலிகள் அல்ல" என்று மணிஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

You'r reading இந்திய மக்கள் சோதனை எலிகள் அல்ல - கோவாக்சின் தடுப்பூசி குறித்து காங்கிரஸ் எம்.பி. கருத்து Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை