மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு தாவுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நடிகையும், இக்கட்சியின் எம்பியுமான சதாப்தி ராய் இக்கட்சியில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் விரைவில் பாஜகவில் சேரப் போவதாகவும் கூறப்படுகிறது.தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுடன் மேற்கு வங்க மாநிலமும் இந்த வருடம் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் இம்முறை எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. நட்டா உள்பட பாஜகவின் தேசியத் தலைவர்களில் பெரும்பாலானோர் அடிக்கடி கொல்கத்தாவில் முகாமிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பல முக்கிய பிரமுகர்களை பாஜக தங்கள் கட்சி பக்கம் இழுத்து வருகிறது. கடந்த டிசம்பர் 19ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்எல்ஏக்களும், ஒரு எம்பியும் பாஜகவில் சேர்ந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் முன்னிலையில் இந்த கட்சி தாவும் நிகழ்ச்சி நடந்தது. மொத்தமாக 7 எம்எல்ஏக்களும், ஒரு எம்பியும் பாஜகவுக்கு தாவியது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விரைவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து மேலும் 50 எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வருவார்கள் என்று பாஜக மேற்கு வங்க மாநில தலைவர் திலீப் கோஷ் சமீபத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இக்கட்சிக்கு மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் நடிகையும், திரிணாமுல் லோக் சபா எம்.பி.யுமான சதாப்தி ராய் பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பிர்பும் தொகுதியில் கடந்த 2009ம் ஆண்டு முதல் சதாப்தி ராய், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியாக இருந்து வருகிறார். இந்நிலையில் கட்சியில் இருந்து விலகப் போவதாக தன்னுடைய பேஸ்புக்கில் சதாப்தி ராய் சூசகமாக தெரிவித்துள்ளார். நாளை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.