தடுப்பூசி போடப்பட்ட பிறகு மோசமான தீவிர பக்கவிளைவு ஏற்பட்டால் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் இழப்பீடு வழங்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் 55 லட்சம் தடுப்பூசிகளை வாங்குவதற்கான ஆணையை அரசு வழங்கியுள்ளது.பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பு கோவாக்சின் தடுப்பூசியாகும். முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகளில் கோவிட்-19 நோய்க்கு எதிரான ஆற்றலை உடலில் தோற்றுவிக்கும் இதன் திறன் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மூன்றாம் கட்ட மருத்துவ சோதனைகள் நடந்து வருகின்றன. அது முடிந்தபிறகே தடுப்பூசியின் திறன் உறுதி செய்யப்பட முடியும்.தடுப்பூசியைப் போட்டுக்கொள்பவர்கள் கையெழுத்திடும் ஒப்புகை படிவத்தில், ஏதேனும் தீவிர எதிர்விளைவுகள் ஏற்படும் பட்சத்தில் அரசு குறித்துள்ள அங்கீகரிக்கப்பட்ட மையங்கள் அல்லது மருத்துவமனைகளில் தங்களுக்கு மருத்துவரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தரத்தில் பராமரிப்பு அளிக்கப்படும்.
அந்த தீவிர எதிர்விளைவு, தடுப்பூசியின் காரணமாக ஏற்பட்டது என்று நிரூபணமானால் அதற்கான இழப்பீட்டை பாரத் பயோடெக் (BBIL) நிறுவனம் வழங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கோவிட்-19 நோய் குறித்த முன்னெச்சரிக்கைகளை கைக்கொள்ள வேண்டாம் என்று அர்த்தம் அல்ல என்றும் அப்படிவத்தில் கூறப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.