வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்று மத்திய வேளாண் அமைச்சர் தோமர் கூறியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.17) 53வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், சட்டங்கள் குறித்து பரிசீலிக்க 4 நிபுணர்கள் அடங்கிய குழுவையும் சுப்ரீம் கோர்ட் அமைத்தது. இதில் ஒருவர் தாமாக விலகி விட்டார்.
குழுவில் உள்ள 4 பேருமே அரசுக்கு ஆதரவாகவும், சட்டங்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு தருணங்களில் பேசியவர்கள் என்று கூறி, குழுவை ஏற்க விவசாயிகள் மறுத்து விட்டனர். இதற்கிடையே விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் 40 பேருடன் மத்திய அரசு இது வரை 9 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் இன்று(ஜன.17) கூறியதாவது: வேளாண் சட்டங்களில் விவசாயிகளுக்கு ஏற்படும் சந்தேகங்களை போக்கும் வகையில் பரிந்துரைகளை அனுப்பியிருக்கிறோம்.
மண்டி, வர்த்தகர்கள் பதிவு, மின்சாரக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தகவல் அனுப்பியிருக்கிறோம். ஆனால், விவசாயிகள் அந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையில் பிடிவாதமாக உள்ளனர். சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ள நிலையில் சட்டங்களை அமல்படுத்த முடியாது. இந்த சூழலில், சட்டங்களின் ஒவ்வொரு பிரிவு குறித்தும் விவாதித்து திருத்தியமைக்க அரசு தயாராக உள்ளது. வரும் 19ம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் அது பற்றி விவாதிக்கத் தயாராக உள்ளோம். ஆனால், சட்டங்களை ரத்து செய்ய முடியாது. இவ்வாறு அமைச்சர் தோமர் தெரிவித்தார்.