அசாம் மாநிலத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆணையர்கள் குழு ஆய்வு மேற்கொள்கிறது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இதையடுத்து, இந்த மாநிலங்களில் தேர்தலை நடத்தத் தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.ஏற்கனவே தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையக் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர். அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தினர். அப்போது தமிழ்நாட்டில் ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்த வேண்டுமென கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் சுசில் சந்திரா, ராஜீவ்குமார் மற்றும் துணை ஆணையர் சந்திரபூஷன் குமார், டைரக்டர் தர்மேந்திர சர்மா உள்ளிட்டோர் இன்று(ஜன.18) அசாம் மாநிலம் கவுகாத்திக்குச் சென்றுள்ளனர். அங்கு மாநில தலைமை அதிகாரியிடம் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவாதிக்கின்றனர். பின்னர், அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை நடத்தவுள்ளனர். சிறிய மாநிலமான அசாமில் மொத்தம் 126 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அசாமில் தற்போது முதல்வர் சர்பானந்தா சோனாவால் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பாக அம்மாநில மக்கள், மத்திய பாஜக அரசுக்கு எதிராக போராடி வந்தனர். அந்தப் பிரச்சனை தேர்தலில் முக்கிய பிரச்சனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.