புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சாந்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. அவரது பணிகள் என்றென்றும் நினைவு கூறப்படும் என்று பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், புற்றுநோய் சிகிச்சை நிபுணருமான டாக்டர் சாந்தா இன்று(ஜன.19) மரணமடைந்தார். அவருக்கு வயது 93. அவர் கடந்த பல ஆண்டுகளாக ஏழை நடுத்தர மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை அளிப்பதில் அரும்பணியாற்றியவர். இதய நோய் காரணமாக அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் சாந்தா சேர்க்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் காலமானார். டாக்டர் சாந்தாவின் உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், டாக்டர் சாந்தா புற்றுநோய் மருத்துவத் துறையில் ஆற்றிய பணிகள் என்றென்றும் நினைவு கூறத்தக்கவை. ஏழை கீழ்த்தட்டு மக்களுக்கு சென்னை அடையார் புற்றுநோய் சிகிச்சை மையம் ஆற்றி வரும் பணிகள் பாராட்டத்தக்கவை. டாக்டர் சாந்தாவின் மரணம் வருத்தம் அளிக்கிறது. ஓம் சாந்தி என்று கூறியிருக்கிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், டாக்டர் சாந்தாவின் மறைவு மருத்துவ துறைக்கும், தமிழகத்துக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரது இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. அவர் மறைந்தாலும் அவரது சிகிச்சை முறைகள் மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும்.
அவரை இழந்து வாடும் அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன். சாந்தாவின் நற்பெயருக்கு பெருமை சேர்க்கும் விதத்திலும், அவர் ஆற்றிய சேவைகளை கௌரவிக்கும் வகையிலும் காவல் துறை மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு வேதனையுற்றேன். மருத்துவ உலகிற்குப் பேரிழப்பு. ஏழைகளும் புற்றுநோய்க்கு எளிதில் சிகிச்சை பெற அர்ப்பணிப்புடன் உழைத்தவர். அவரை இழந்து வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.