தமிழ்நாடு, கேரளா உள்பட 4 மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது மத்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சிரம் இன்ஸ்டிட்யூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களின் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் கொரோனா தடுப்பு ஊசி போடும் பணிகள் கடந்த 16ம் தேதி நாடு முழுவதும் தொடங்கியுள்ளது. முதல்கட்டமாக டாக்டர்கள், நர்சுகள் உள்படச் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும், சுகாதாரப் பணியாளர்களுக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.
இந்த கட்டத்தில் 3 கோடி பேருக்குத் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டது. டெல்லியில் பிரதமர் மோடி இந்த தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள சுகாதாரத் துறை ஊழியர்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த 4 மாநிலங்களில் கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் தான் மிகக் குறைவு எனத் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் முதல் நாளில் 2,945 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கேரளாவில் முதல் நாளில் 8,062 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தமிழ்நாட்டில் இரண்டாவது நாளான நேற்று 7,678 பேரும், கேரளாவில் 7,070 பேரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். சத்தீஸ்கரில் முதல் நாளில் 5,592 பேரும், 2வது நாளில் 4,459 பேரும், பஞ்சாபில் முதல் நாளில் 1,319 பேரும், 2வது நாளில் 1882 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அதே சமயத்தில் ஆந்திராவில் முதல் நாளில் 18,412 பேரும் 2வது நாளில் 9,758 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். கர்நாடகாவில் முதல் நாளில் 13,594 பேரும், 2வது நாளில் 36,888 பேரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தமிழ்நாடு, கேரளா, சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே தடுப்பூசி எடுத்துக் கொள்கின்றனர்.
ஆனால் கர்நாடகா, தெலங்கானா ஆந்திரா உட்பட மாநிலங்களில் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களின் எண்ணிக்கை 70 சதவீதமாக உள்ளது. தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களில் தடுப்பூசி எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பது மத்திய அரசுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. மத்திய சுகாதாரத் துறை உயர் அதிகாரிகள் மாநில சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் இந்த அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. எனவே தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று இந்த நான்கு மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.