மம்தாவின் மாஸ்டர் அட்டாக் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட முடிவு

by Nishanth, Jan 20, 2021, 17:09 PM IST

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நந்திகிராம் என்ற பெயரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. அங்கு விவசாய நிலத்தை அபகரிப்பதை கண்டித்து விவசாயிகள் மாபெரும் போராட்டத்தை நடத்தினர். அதில் 14 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அந்தப் போராட்டத்தை பயன்படுத்தித் தான் மம்தா பானர்ஜி மேற்கு வங்க மாநிலத்தில் 33 வருடங்களாக கோலோச்சிக் கொண்டிருந்த கம்யூனிஸ்டுகளிடமிருந்து ஆட்சியை கைப்பற்றினார். இப்போது விரைவில் வர உள்ள சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய சொந்த தொகுதியான பவானிப்பூரை விட்டுவிட்டு நந்திகிராமில் போட்டியிடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.

இது மம்தாவின் அவநம்பிக்கையான நடவடிக்கை என்று பாஜக கூறினாலும், இது தங்களது தலைவியின் 'மாஸ்டர் அட்டாக்' என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர்.
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய நான்கு மாநிலங்களுடன் மேற்கு வங்க மாநிலத்திற்கும் இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் முக்கிய அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. இந்த 5 மாநிலங்களில் அசாம் தவிர மற்ற எந்த மாநிலத்திலும் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை. அசாமில் மட்டுமே பாஜக ஆட்சி நடத்துகிறது.

எனவே மற்ற நான்கு மாநிலங்களிலும் காலூன்ற பாஜக பகீரத முயற்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக மேற்கு வங்காளத்தை கைப்பற்ற பாஜக மிக தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இதற்காக கடந்த பல மாதங்களுக்கு முன்பே மத்திய உள்துறை அமைச்சரும், பாஜகவின் முன்னாள் தலைவருமான அமித்ஷா தலைமையில் அதிரடி வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது. பாஜக தலைவர் நட்டா தலைமையில் முக்கிய தலைவர்கள் கொல்கத்தாவில் முகாமிட்டு தேர்தலுக்கான வியூகங்களை வகுத்து வருகின்றனர். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களை பாஜக தங்கள் பக்கம் இழுத்தும் வருகிறது. கடந்த மாதம் கொல்கத்தாவில் நடந்த பாஜக பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு எம்பி பாஜகவில் சேர்ந்தனர். இது மம்தா பானர்ஜிக்கு பலத்த அடியாக இருந்தது. குறிப்பாக திரிணாமுல் கட்சியின் முக்கிய தலைவராக இருந்த சுவேந்து அதிகாரி பாஜகவுக்கு தாவியது மம்தா பானர்ஜிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனாலும் மம்தா பானர்ஜி அதை வெளிக் காட்டவில்லை. கடந்த 2007ம் ஆண்டு இந்தோனேசியாவை சேர்ந்த சலீம் குழுமம் நந்திகிராமில் ஒரு ரசாயன தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டது. இதற்காக விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்த முயன்றபோது அங்கு பெரும் கலவரம் வெடித்தது. இதில் 14 கிராமத்தினர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பிறகு தான் மேற்கு வங்க மாநிலத்தில் மம்தாவின் அலை வீசத் தொடங்கியது. இந்நிலையில் சமீபத்தில் நந்திகிராம் சென்ற மம்தா பானர்ஜி விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் 1,000 ரூபாய் மாத ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார். மேலும் போராட்டத்தில் கலந்து கொண்ட போது காணாமல் போன 10 குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அளித்தார். 2011ம் ஆண்டுக்கு பின்னர் மம்தா பானர்ஜி தற்போது தான் நந்திகிராமுக்கு சென்றுள்ளார்.

அப்போது அவர் பேசியது: நந்திகிராம் எனக்கு அதிர்ஷ்டமான பகுதியாகும். இது என்னுடைய ஒரு இளைய தங்கை. நான் கண்டிப்பாக இந்த தொகுதியில் இருந்து போட்டியிடுவேன். பவானிப்பூர் தொகுதியிலும் போட்டியிட வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பமாகும். முடியாவிட்டால் அந்த தொகுதியில் வேறு பொருத்தமான வேட்பாளர் போட்டியிடுவார். ( கடந்த 2011 முதல் மம்தா பானர்ஜி பவானிப்பூர் தொகுதியில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார்) மம்தா பானர்ஜி பேசும் போது, பாஜகவுக்கு தாவிய சுவேந்து அதிகாரியை தாக்கவும் மறக்கவில்லை. நந்திகிராம் இயக்கம் என்னால் வளர்க்கப்பட்ட ஒரு இயக்கமாகும். ஆனால் இங்கு சிலர் பெரிய வாயில் பல விஷயங்களை கூறுகின்றனர். அவர்கள் முறைகேடாக ஏராளமான அளவு பணம் சம்பாதித்துள்ளனர். அதை காப்பாற்றுவதற்காகத் தான் பாஜகவில் சேர்ந்துள்ளனர். அவர்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்து கொள்ளட்டும். ஆனால் நான் மேற்கு வங்காளத்தை பாஜகவிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என உறுதிமொழி எடுத்துள்ளேன் என்று பேசினார்.

2011ம் ஆண்டு நடந்த தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு 77.46 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஆனால் 2016ல் இது 48 சதவீதமாக குறைந்தது. கடந்த 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜிக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டது. அந்த தேர்தலில் பல தொகுதிகளில் மம்தாவுக்கு வாக்கு சதவீதம் குறைந்தது. இதுகுறித்து மேற்கு வங்க மாநில அரசியல் வல்லுநர் பிஸ்வநாத் சக்கரவர்த்தி கூறியது: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மம்தாவின் வாக்கு வங்கி குறைந்தது அவருக்கு ஒரு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டதாகவே கருதுகிறேன். இது மம்தாவுக்கு ஒரு கலக்கத்தை ஏற்படுத்தி இருக்க கூடும். நந்திகிராம் தொகுதியில் சிறுபான்மையினருக்கு 30 சதவீதம் வாக்குகள் உள்ளன. பவானிப்பூர் தொகுதியில் 70 சதவீதத்திற்கு மேல் பெங்காலி அல்லாதவர்கள் வசிக்கின்றனர். இதனால் தான் பெங்காலிகள் அல்லாதவர்களை வெளியில் இருந்து வந்தவர்கள் என்று மம்தா அடிக்கடி கூறுவார். இந்த காரணத்தால் அவர் பவானிப்பூர் தொகுதியில் இருந்து வேறு தொகுதிக்கு மாறுவார் என்று ஏற்கனவே எதிர்பார்த்த ஒன்று தான். இதனால் தான் பாதுகாப்பான நந்திகிராம் தொகுதியை அவர் தேர்ந்தெடுத்துள்ளார்.

மம்தா பானர்ஜி கிழக்கு மற்றும் மேற்கு மிட்னாபூர் மாவட்டங்களில் தன்னுடைய இழப்பை குறைக்க கண்டிப்பாக முயற்சி எடுப்பார். குறைந்தது 35 தொகுதிகளையாவது மம்தாவிடம் இருந்து கைப்பற்றுவேன் என்று சுவேந்து உறுதி பூண்டுள்ளார். எனவே சுவேந்துவின் வளர்ச்சியை தடுக்க கண்டிப்பாக மம்தா கடும் நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்பது உறுதி. இவ்வாறு அவர் கூறினார். பாஜகவின் தேசிய செயலாளர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், மம்தா எதற்காக நந்திகிராமில் போட்டியிடுகிறார்? அவருக்கு தன்னுடைய கட்சித் தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லையா? தெற்கு கொல்கத்தாவை விட்டு ஏன் அவர் ஓடுகிறார்? நந்திகிராமில் உள்ள கிராம மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரிகள் இப்போது மம்தாவின் கட்சியில் சேர்ந்துள்ளனர். அப்படியானால் நீதி எங்கே போனது? போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட தியாகிகளின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் வரும் தேர்தலின் போது மம்தாவுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். எங்கள் கட்சியில் சுவேந்து அதிகாரி சேர்ந்தது சரிதான் என்பதை மம்தாவின் செயல் உறுதிப்படுத்தியுள்ளது.

சுவேந்துவுடன் மோதுவதற்காக அவர் கொல்கத்தாவிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் சென்று போட்டியிட தீர்மானித்துள்ளார். இதன் மூலம் சுவேந்து ஒரு பலமான ஆள் என்பதை அவரே உறுதி செய்து விட்டார். அதுமட்டுமில்லாமல் பாஜக தனிப்பட்ட யாரையும் நம்பி இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் உரிய தலைவர்கள் பாஜகவில் உள்ளனர் என்று கூறினார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பி சவுகதா ராய் கூறுகையில், மம்தா பானர்ஜி ஒரு மாஸ்டர் அட்டாக்கை தொடங்கியுள்ளார். நந்திகிராமில் பாஜக, மம்தாவை எதிர்கொண்டே தீரவேண்டும். நந்திகிராமுக்கு அவர் வருவதன் மூலம் சுவேந்துவின் அனைத்து நடிவடிக்கைகளும் ஸ்தம்பிக்கப் போவது உறுதி. அவரது போராட்டம் வேறு லெவலில் இருக்கும் என்று கூறினார்.

You'r reading மம்தாவின் மாஸ்டர் அட்டாக் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட முடிவு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை