சிகாகோ: கொரோனாவிற்கு பயந்து அமெரிக்காவின் சிகாகோ விமான நிலையத்தில் 3 மாதங்கள் மறைந்திருந்த இந்திய வம்சாவளி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் புறநகரான ஆரஞ்ச் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் ஆதித்யா சிங் என்பவர், நண்பர்களுடன் வசித்து வந்தார். இதற்கிடையே, லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து விமானம் மூலம் சிகோகாவின் ஓ'ஹேர் விமான நிலையத்துக்கு கடந்த அக்டோபர் 19-ம் தேதி அவர் சென்றார்.
தொடர்ந்து, விமான நிலையத்தின் உயர் பாதுகாப்பு பகுதியில் சுமார் 3 மாதங்கள் ஆதித்யா சிங் மறைந்து வாழ்ந்துள்ளார். கடந்த 16-ம் தேதி மதியம், யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவன ஊழியர்கள் 2 பேர், அவரை பார்த்து சந்தேகம் அடைந்தனர். ஆதித்யாவிடம் அடையாள அட்டையை கேட்டுள்ளனர். இதற்கு ஆதித்யா சிங் ஓர் அடையாள அட்டையை காண்பித்தார். அதில் இருந்த புகைப்படத்துக்கும் ஆதித்யா சிங்குக்கும் வேறுபாடு இருந்ததால் போலீஸில் புகார் அளித்தனர். இதையடுத்த ஆதித்யா சிங் கைது செய்யப்பட்டார்.
கொரோனா தொற்றிற்கு அச்சப்பபட்டு வீட்டை விட்டு வெளியேறி சிகாகோ விமான நிலையத்துக்கு வந்தேன். மீண்டும் வீட்டுக்கு சென்றால் வைரஸ் தொற்றிவிடும் என்று அஞ்சி விமான நிலையத்திலேயே தங்கிவிட்டேன். பயணிகள், விமான நிலைய ஊழியர்களிடம் உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டேன். விமான நிலைய வளாகத்தில் ஓர் அடையாள அட்டை கிடைத்தது. யாராவது சந்தேகப்பட்டு கேட்டால் அந்த அடையாள அட்டையை காண்பிப்பேன் என்று ஆதித்யா சிங் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சூசன்னா ஆர்டிஸ், அக்டோபர் 19 முதல் ஜனவரி 16-ம் தேதி வரை 3 மாதங்கள் விமான நிலையத்தில் ஒருவர் வாழ்ந்துள்ளார். அவரை யாருமே கண்டுபிடிக்கவில்லை என்று கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. ஆதித்யா சிங் ரூ.73,200 செலுத்தி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.