தலைப்பைப் படித்ததும் இந்த அதிசயம் நம்ம ஊரிலா என்று நினைத்து ஏமாந்து விட வேண்டாம். இந்த அற்புதம் நடந்திருப்பது பக்கத்து வீடான ஆந்திராவில்..அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டத்தைத் துவக்கி வைத்திருக்கிறார்.இதற்கான விழாவை விஜயவாடாவில் இன்று பிரமாண்டமாக நடத்தி மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறார் ஜெகன்மோகன் ரெட்டி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்த வாக்குறுதிகளான நவரத்தின திட்டங்களில் ஒன்று ரேஷன் பொருட்களை வீட்டுக்கே சென்று விநியோகிக்கும் திட்டம்.
இத்திட்டத்தின்படி மாநிலம் முழுவதும் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு எடுத்துச் செல்ல 830 கோடி ரூபாய் செலவில், பிரத்தியேகமாகத் தயார் செய்யப்பட்ட 9 ஆயிரத்து 260 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை விஜயவாடாவில் பேன்ஸ் சந்திப்பில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
ஏற்கனவே அரசின் திட்டங்களைப் பொதுமக்களுக்குக் கொண்டு செல்க 50 வீடுகளுக்கு ஒரு தன்னார்வலர்களை ஆந்திர அரசு நியமனம் செய்துள்ளது. இவர்கள் மூலம் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான பென்ஷன் மாதந்தோறும் முதல் தேதி அன்று பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று வழங்கப்படுகிறது. பிறப்பு, இறப்பு சான்றிதழ், சொத்துவரி, குடிநீர் இணைப்பு உள்ளிட்ட அரசு தொடர்பான எல்லா வேலைகளையும் மக்களின் வீட்டிற்குச் சென்று தன்னார்வலர்கள் பூர்த்தி செய்து வருகின்றனர். அவர்கள் மூலமே ரேஷன் பொருட்கள் விநியோகத்தையும் இந்த திட்டத்தையும் செயல்படுத்தி வீடுகளுக்கு சென்று வழங்கப்பட உள்ளது.