கொரோனா லாக் டவுன் முடிந்து 10 மாதங்களுக்குப் பின்னர் முதன் முதலாக நாளை ஒரு மலையாள சினிமா வெளியாகிறது. ஜெயசூர்யா நடித்த வெள்ளம் என்ற படம் நாளை 150 தியேட்டர்களில் வெளியிடப்படுகிறது.கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த வருடம் மார்ச் முதல் கேரளாவில் அனைத்து சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. லாக் டவுன் காரணமாக அனைத்து சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பல படங்கள் முடங்கின. வெளியீட்டுக்குத் தயாராக இருந்த பல சினிமாக்களையும் திரையிட முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் நாடு முழுவதும் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி படிப்படியாக தியேட்டர்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி தமிழ்நாடு, புதுச்சேரி மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆனால் கேரளாவில் கொரோனா பரவல் குறையாததால் தியேட்டர்களை திறக்க அரசு முதலில் அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து தியேட்டர்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்களும், சினிமா சங்கத்தினரும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர். 10 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்ததால் தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கேரள அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கடந்த 5ம் தேதி முதல் நிபந்தனைகளுடன் தியேட்டர்களை திறக்க கேரள அரசு அனுமதி அளித்தது. 50 சதவீதம் பேரை மட்டுமே தியேட்டர்களில் அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உரிய நிவாரணம் கிடைக்காமல் தியேட்டர்களை திறக்க முடியாது என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறினர். இதையடுத்து தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் சினிமா சங்கத்தினருடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் தியேட்டர் உரிமையாளர்களுக்குக் கேளிக்கை வரி விலக்கு உள்பட பல்வேறு சலுகைகளை அரசு அறிவித்தது. இதையடுத்து கடந்த 13ம் தேதி முதல் கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இதன்படி முதல் படமாக விஜய்யின் மாஸ்டர் திரையிடப்பட்டது. 350க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக மாஸ்டர் படம் தான் கேரளா முழுவதும் தியேட்டர்களில் திரையிடப்பட்டு வருகிறது. மாஸ்டருக்கு நல்ல வசூல் கிடைத்து வருவதால், இந்தப் படத்தை மாற்ற தியேட்டர் உரிமையாளர்கள் முன்வரவில்லை. இந்நிலையில் நாளை முதன்முதலாக 10 மாதங்களுக்கு பின்னர் மலையாள படம் ரிலீசாக உள்ளது. ஜெயசூர்யா நடத்த வெள்ளம் என்ற இந்தப் படம் 150 தியேட்டர்களில் வெளியாகிறது. கடந்த 10 மாதங்களுக்குப் பின்னர் ஒரு மலையாள படம் தற்போது தான் கேரளாவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.