திருப்பதியில் 10 நாள் இந்து தர்ம பாதுகாப்பு யாத்திரையை தெலுங்குதேசம் கட்சி தொடங்கியுள்ளது.ஆந்திராவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக கோயில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு வருகின்றன. விஜயநகரம் ராமர் தீர்த்தம் கோயிலில் இருந்த ராமர் சிலை உடைக்கப்பட்டிருந்தது. அதற்கு முன்பாக, விஜயவாடாவில் சீதா தேவி சிலை உடைக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அந்தர்வேதி லட்சுமி நரசிம்மர் கோயில் தேர் தீ வைக்கப்பட்டு எரிந்தது. இந்த சம்பவங்களைக் கண்டித்து பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதே சமயம், சிலை உடைப்பு மற்றும் வதந்தி பரப்பிய வழக்குகளில் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த 13 பேர், பாஜகவைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கிறிஸ்தவர் என்பதால்தான், அவரது ஆட்சியில் இந்த சம்பவங்கள் நடக்கின்றன என்று பாஜகவும், ஜனசேனாவும் குற்றம்சாட்டி வந்தன. இதனால், முதல்வர் ஜெகன்மோகன் தற்போது தான் இந்துக்களுக்கு எதிரி அல்ல என்று கூறி வருகிறார். மேலும், அவர் மாட்டுப் பொங்கலன்று 108 மாடுகளைக் கொண்டு நடத்தப்பட்ட கோமாதா பூஜையில் பங்கேற்றார். இதையடுத்து, தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் காவிக்கு மாறத் தொடங்கியுள்ளார். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக போல் இருக்கும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும், தெலுங்குதேசமும் பாஜகவுக்குப் பயந்து தற்போது இந்துத்துவா அரசியலுக்கு மாறத் தொடங்கியுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, திருப்பதி லோக்சபா தொகுதி எம்.பி. பாலி துர்காபிரசாத், கொரோனா பாதித்து இறந்து விட்டார். எஸ்.சி. தொகுதியான திருப்பதியில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தெலங்கானாவில் துப்பக்கா சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வென்றது போல், திருப்பதி மக்களவை தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜக வெல்லும் என்று அக்கட்சியின் தெலங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய்குமார் கூறியிருக்கிறார். மேலும், பாஜக அடுத்த மாதம்(பிப்ரவரி) ரதயாத்திரை நடத்தப் போவதாக அறிவித்தது .உடனே, இதற்குப் போட்டியாக தெலுங்குதேசம் கட்சியும் இந்து மதத்தைக் காப்போம் என்ற முழக்கத்துடன் 10 நாள் தர்ம பரிரக்ஷனா யாத்திரையை இன்று(ஜன.21) திருப்பதி தொகுதியில் தொடங்கியுள்ளது. இந்த யாத்திரை 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும் 700 கிராமங்களில் இந்த யாத்திரை நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளது. திருப்பதியில் கடந்த முறை தெலுங்கு தேசம் சார்பில் போட்டியிட்டுத் தோற்ற பனபகா லட்சுமியே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.