டாஸ்மாக் மது பானங்களுக்கு இனி கண்டிப்பாக ரசீது: உயர்நீதிமன்றம் உத்தரவு

டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களுக்கு உரிய ரசீது கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

by Balaji, Jan 21, 2021, 14:33 PM IST

தஞ்சாவூரைச் சேர்ந்த ராஜேஸ்வரி பிரியா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தார். அதில், தமிழக அரசுக்கு டாஸ்மாக் கடைகள் மூலம் அதிக அளவில் வருமானம் உள்ளது. அதில், விற்பனையாகும் மது வகைகளுக்கு உரிய ரசீது வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு பாட்டிலுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட 10 முதல் 20 ரூபாய் வரை கூடுதலாக வசூல் செய்யப்படுகிறது. மதுபான கடைகளில் போலி மதுபானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.

நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாட்டில் உள்ள மதுபான கடைகளில் ரசீது வழங்கப்பட வேண்டும். ஆனால் தமிழகத்தில் உள்ள எந்த ஒரு மதுபானக் கடையிலும் ரசீது வழங்கப்படுவதில்லை.ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் மது பானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக வசூல் செய்வதைத் தடுக்கவும், கணினி மயமாக்கப்பட்ட ரசீது வழங்கப்பட வேண்டும். போலி மதுபான விற்பனையைத் தடுக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஆனந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்.மதுபான கடைகளின் விதிப்படி விற்பனையாகும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் ரசீது கொடுக்கப்படவேண்டும். ஆனால் முறைப்படி இது கடைப்பிடிக்கப்படுவதில்லை.மதுபானங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு விற்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்களும் வழக்குகளும் இருந்து வருகிறது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பானங்களுக்குக் கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும்.கடையின் முன்பு அனைவருக்கும் தெரியும்படி விலைப் பட்டியல் வைக்க வேண்டும். விற்பனை ரசீதுக்கான பதிவேடுகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்.

இது முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்று ஒவ்வொரு கடைகளிலும் அவ்வப்போது அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளைப் பின்பற்றாத விற்பனை பிரதிநிதிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.இந்த உத்தரவை டாஸ்மார்க் மேலாண் இயக்குனர் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாகக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனச் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என தரப்பட்டு வழக்கை அடுத்த மாதம் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You'r reading டாஸ்மாக் மது பானங்களுக்கு இனி கண்டிப்பாக ரசீது: உயர்நீதிமன்றம் உத்தரவு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை