கர்நாடகா சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கிய நிலையில், பிச்சைக்காரர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சட்டமன்ற தேர்தல் வரும் மே மாதம் 12ம் தேதி நடைபெற உள்ளது. கர்நாடகாவில் தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும், பாஜக மற்றும் மதச்சார்பற்ற கட்சிகள் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளவும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.
அதன்படி, பிச்சைக்காரர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் பணியை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இதில், மொத்தம் 508 பிச்சைக்காரர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரி மஞ்சுநாத் தெரிவித்துள்ளார். மேலும், இதில் 364 ஆண்களும், 144 பெண்களும் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரும், ராஜேஸ்வரி நகர் தொகுதியில் உள்ள அரசு மறுவாழ்வு மையத்தில் வசித்து வருகின்றனர் என்றும், இவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.