மம்தாவுக்கு அடிமேல் அடி மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு புதிய முஸ்லிம் கட்சி உதயம்

by Nishanth, Jan 23, 2021, 16:45 PM IST

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக கொடுத்து வரும் நெருக்கடியால் ஏற்கனவே மம்தா பானர்ஜி சிக்கித் தவித்து வருகிறார். இந்த சூழ்நிலையில் அவருக்கு எதிராக மேலும் ஒரு புதிய முஸ்லிம் கட்சி உதயமானது மம்தாவுக்கு கூடுதல் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகம், கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்து மேற்கு வங்க மாநிலமும் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. மற்ற 4 மாநிலங்களை விட மேற்கு வங்க மாநிலத்தின் தேர்தல் முடிவு தான் தேசிய அளவில் மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த மாநிலத்தில் ஆட்சியமைக்க பாஜக பல மாதங்களுக்கு முன்பே பல அதிரடி திட்டங்களை வகுத்து வருகிறது.

குறிப்பாக மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைகளை தங்கள் பக்கம் இழுப்பது தான் பாஜகவின் முக்கிய அஜெண்டாவாக உள்ளது. இதன்படியே பல முக்கிய பிரபலங்கள் பாஜகவுக்கு தாவி வருகின்றனர். சமீபத்தில் திரிணாமூல் கட்சியை சேர்ந்த 7 எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு எம்பி உள்பட பலர் பாஜகவுக்கு தாவினர்.இன்னும் பல முக்கிய பிரபலங்கள் தங்கள் பக்கம் வருவார்கள் என்றும், விரைவில் மம்தாவின் கூடாரம் காலியாகி, அவர் தனிமரமாகி விடுவார் என்றும் பாஜகவின் தலைவர்கள் கூறி வருகின்றனர். தொடர்ந்து 34 ஆண்டுகள் மேற்குவங்க மாநிலத்தை ஆண்டு வந்த கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டையை தகர்த்து மம்தா பானர்ஜி 2011ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றினார்.

தற்போது 2வது முறையாக இவர் ஆட்சியில் உள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியை போலவே தானும் தொடர்ந்து மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க வேண்டும் என்பது தான் மமம்தாவின் கனவாகும். ஆனால் சமீப காலமாக அவருக்கு பாஜக கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது.இதனால் தன்னுடைய கனவு நனவாகி விடுமோ என்ற அச்சம் மம்தாவுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. பாஜக கொடுத்துவரும் நெருக்கடி ஒருபுறமிருக்க, இன்னொருபுறம் இதுவரை அவருக்கு ஆதரவு அளித்து வந்த பிர்ஜாதா அப்பாஸ் சித்திக் என்பவர் ஒரு புதிய கட்சியைத் தொடங்கியுள்ளது அவருக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப்படும் பார்புரா ஷெரீப் தர்காவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் இந்த பிர்ஜாதா அப்பாஸ் சித்திக்கி. இவர் இதுவரை மம்தாவுக்குத் தான் ஆதரவு தெரிவித்து வந்தார். ஏற்கனவே ஹைதராபாத் எம்பியான அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்கு வங்க மாநிலத்தில் முதல் முறையாக போட்டியிட தீர்மானித்துள்ளது.

பிர்ஜாதாவின் தலைமையில் தான் மேற்கு வங்க மாநிலத்தில் போட்டியிட ஒவைசி விரும்பினார். ஆனால் அதை அவர் ஏற்கவில்லை. இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள 90 தொகுதிகளில் போட்டியிட ஒவைசி தீர்மானித்தார். இதற்கிடையே மம்தாவுடன் பிர்ஜாதா கூட்டணி பேசினார். தான் புதிதாக கட்சி தொடங்கப் போவதாகவும், தனக்கு 40 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று அவர் கேட்டார். ஆனால் புதிய கட்சிக்கு 40 தொகுதிகளா என்று அதிர்ச்சியடைந்த மம்தா, பிர்ஜாதாவின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து பிர்ஜாதா, இந்தியன் செக்யூலர் பிரெண்ட் (ஐஎஸ்எப்) என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை தொடங்கி உள்ளார்.
தன்னுடைய கட்சி வரும் தேர்தலில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவித்துள்ளார். பிர்ஜாதாவின் இந்த அதிரடி அரசியல் பிரவேசம் மம்தாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பிர்ஜாதா கூறுகையில், மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா அரியணையில் ஏறுவதற்கு முன் அரசுப் பணிகளில் முஸ்லிம்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றார். ஆனால் பதவியேற்றவுடன் மம்தா அதை ஏனோ மறந்து விட்டார். அவர் இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சியில் தான் ஈடுபட்டு வந்தார். இதனால் தான் முஸ்லிம்கள் சேர்ந்து தங்களுக்காக இந்த கட்சியைத் தொடங்கியுள்ளனர் என்று கூறினார்.மம்தாவுக்கு இது மட்டுமல்ல தலைவலி...... பீகாரில் பாஜகவின் கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு கை பார்க்கத் தீர்மானித்துள்ளது. இந்த கட்சி முதல் முறையாக இங்கு போட்டியிடுகிறது. இதுவும் மம்தாவுக்கு அடுத்த தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

பிர்ஜாதாவின் புதிய கட்சி, ஒவைசி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை சேர்ந்து வாக்குகளைப் பிரித்தால் அந்த இடைவெளியில் பாஜக வந்துவிடுமோ என மம்தாவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இடதுசாரிகள், காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து இந்த தேர்தலைச் சந்திக்கின்றன. இவர்களும் வாக்குகளைப் பிரிக்க அதிக வாய்ப்புள்ளதால் இம்முறை மேற்கு வங்க மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்ற கருத்தும் நிலவுகிறது. இப்படி ஒரு நிலை வந்தால் ஒருவேளை தனக்குக் குறிப்பிட்ட தொகுதிகள் கிடைத்தால் அதை வைத்து, தான் கிங் மேக்கர் ஆகிவிடலாம் என்றும் பிர்ஜாதா ஒரு கணக்கு போடுகிறார். பிர்ஜாதாவின் இந்த திட்டம் பலிக்குமா என்பது தேர்தலுக்கு பின் தெரிந்து விடும்.

You'r reading மம்தாவுக்கு அடிமேல் அடி மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு புதிய முஸ்லிம் கட்சி உதயம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை