தண்ணீர் குடித்து உடல் எடையைக் குறைக்கும் ஜப்பான் தெரபி

by SAM ASIR, Jan 23, 2021, 16:21 PM IST

கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவதுபோல சில நேரங்களில் எளிய வழிமுறைகளால் தீர்க்கப்படவேண்டிய பிரச்னைகளுக்கு பெரிய அளவில் போராடிக் கொண்டிருப்போம். உடல் எடையைக் குறைப்பது இன்று அப்படிப்பட்ட பிரச்னையாகியிருக்கிறது. தேவைக்கு அதிகமான அளவு எடையோடு அநேகர் இருக்கிறார்கள். உடல் எடை அதிகமாவதால் பல்வேறு உடல்நல கோளாறுகள் எழும்பக்கூடும் என்பதால் எடையை குறைக்குமாறும் மருத்துவர்களோ, உடல் நல ஆலோசகர்களோ அறிவுரை கூறுகின்றனர்.

உடல் எடையை குறைப்பதையே லட்சியமாகக் கொண்டு பலர் பயிற்சி செய்து கொண்டுள்ளனர். இன்னும் பலர் பல்வேறு உணவு ஒழுங்கை கடைபிடிக்கின்றனர். ஆனால், உடல் எடை எதிர்ப்பாக்குமளவுக்குக் குறைகிறதா என்பது கேள்விக்குரிய ஒன்றாகவே உள்ளது. இப்படியெல்லாம் தீவிரமாக பயிற்சி செய்யாமல், கண்டிப்பான உணவு ஒழுங்கை கடைப்பிடிக்காமல் எளிய வழியில் எடையைக் குறைப்பதற்கான முறையை ஜப்பானில் கைக்கொள்ளுகிறார்கள் என்று கூறப்படுகிறது.

தண்ணீர்

நம் வாழ்க்கைக்கு, ஏன் உலகில் அனைத்து உயிர்களின் வாழ்க்கைக்குத் தண்ணீர் இன்றியமையாத ஒன்று. அடிப்படை வாழ்வாதாரங்களில் ஒன்று தண்ணீர். நம்முடைய உடலில் 55 விழுக்காடு நீரால் ஆனது என்றும் கூறப்படுகிறது. ஆகவே உடலின் சமநிலையை பராமரிக்க நாம் தினமும் அதிக அளவில் நீர் அருந்தவேண்டியது அவசியம். போதுமான நீர் அருந்தினால்தான் உடலிலுள்ள நச்சுபொருள்கள் வெளியேறும். அது மட்டுமல்ல, தண்ணீர் உடலின் வளர்சிதை (metabolism) மாற்றத்தைத் துரிதப்படுத்தி எடை குறைப்பில் உதவக்கூடும்எ ன்று சில ஆய்வுகள் கூறுகின்றன. ஜப்பன் தண்ணீர் மருத்துவம் என்று கூறப்படும் முறையானது எப்போதெல்லாம் நீர் அருந்தினால் உடல் எடை குறையும் என்று கூறுகிறது.

ஜப்பானிய நீர் தெரபி

ஜப்பானிய நீர் தெரபி, தினமும் எழுந்ததும் முதல் வேளையாக அறை வெப்பநிலையில் பல தம்ளர் நீர் பருகவேண்டும் என்று கூறுகிறது. இது தவிர, தீவிர கட்டுப்பாடான உணவு ஒழுங்குமுறையை கடைபிடிக்கவேண்டும் என்றும் கூறுகிறது. அதாவது ஒரு உணவுவேளையானது 15 நிமிடங்கள் மட்டுமே என்று வரையறைத்துக்கொள்ளவேண்டும். உணவு சாப்பிடுவதற்கும் சிற்றுண்டி சாப்பிடுவதற்கும் இடையே அதிக நேர இடைவெளி இருக்கவேண்டும்.

தண்ணீர் எப்படி எடையைக் குறைக்கிறது?

உடல் எடை குறைவதற்கு நீர் பலவிதங்களில் உதவுகிறது என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன. எடையை குறைக்கவிரும்புவோர் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பதாக அரை லிட்டர் தண்ணீர் பருக வேண்டும். தண்ணீர் பருகுகிறவர்கள் சாப்பிடும் அளவைக் காட்டிலும் 13 விழுக்காடு குறைவான அளவு சாப்பிடவேண்டும். இனிப்பு சேர்க்கப்பட்ட எந்த பானங்களும் அருந்தக்கூடாது. அந்த வேளைகளில் தண்ணீர் பருகலாம். இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் எடையை அதிகரிக்கும்.தண்ணீர் அருந்துவதினால் வயிறு நிறைந்த உணர்வு ஏற்படும். சாப்பாட்டுக்கு அரை மணி நேரம் முன்பு நீர் அருந்துவதால் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம். தண்ணீர் அருந்துவதோடு, உணவு ஒழுங்கை கண்டிப்பாக கடைபிடிப்பதால் உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும். காலை எழுந்ததும் அறை வெப்பநிலையில் 180 மில்லி லிட்டர் நீர் அருந்தவேண்டும். காலை உணவு சாப்பிடுவதற்கு முக்கால் மணி நேரம் முன்பதாக அருந்தவேண்டும். நாள் முழுவதும் தாகத்திற்கேற்ப நீர் பருகவேண்டும். உணவுவேளை 15 நிமிடத்திற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாப்பாட்டுக்கும் இன்னொரு உணவுக்கும் குறைந்தது 2 மணி நேரம் இடைவெளி இருக்கவேண்டும். உணவை பொறுத்தமட்டில் உடலுக்கு ஆரோக்கியமான எதையும் சாப்பிடலாம்.

மாற்றுக் கருத்துகள்

ஜப்பானிய நீர் தெரபியை பலர் கடைபிடித்தாலும் சிலர் அதில் மாற்றுக் கருத்து கொண்டுள்ளனர். 15 நிமிட நேரத்திற்குள் வயிறு நிறைந்த தகவல் மூளைக்குக் கிடைக்காது. ஆகவே, பதற்றத்தில் தேவைக்கு அதிகமாக சாப்பிடும் வாய்ப்புள்ளதாக சிலர் கூறுகின்றனர். பதற்றமாக அல்ல; மெதுவாக நன்கு மென்று சாப்பிடுவதே ஆரோக்கியமானது என்பதும் வலியுறுத்தப்படுகிறது. இன்னும் சிலர் ஜப்பானிய நீர் தெரபி ஆரம்பத்தில் உடல் எடையை குறைக்கக்கூடும். ஆனால் மிகக்குறைவான கலோரி உணவுகளை சாப்பிடுவது காலப்போக்கில் பயன் தராது. அளவுக்கதிமாக தண்ணீர் அருந்துவதால் உடலில் சோடியத்தின் அளவு குறையக்கூடும். இது சமச்சீரற்ற நிலையை ஏற்படுத்தி, குமட்டல், வாந்தி, வலிப்பு மற்றும் கோமா நிலைக்கும் கொண்டு செல்லக்கூடிய ஆபத்து உள்ளது என்று சிலர் எச்சரிக்கின்றனர். ஆகவே. உரிய மருத்துவ ஆலோசனைகளோடு ஜப்பானிய நீர் தெரபியை கைக்கொண்டு பார்க்கலாம்.

You'r reading தண்ணீர் குடித்து உடல் எடையைக் குறைக்கும் ஜப்பான் தெரபி Originally posted on The Subeditor Tamil

More Health News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை