டெல்லியில் நாளை(ஜன.26) விவசாயிகளின் டிராக்டர்கள் பேரணி திட்டமிட்டபடி நடைபெறவுள்ளது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டிராக்டர்கள் பங்கேற்கின்றன.மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் இன்று(ஜன.25) 61வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் 40 பேருடன் மத்திய அரசு இது வரை 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கிடையே, வேளாண் சட்டங்கள் மற்றும் விவசாயிகள் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களுக்கும் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மேலும், சட்டங்கள் குறித்து பரிசீலிக்க 4 நிபுணர்கள் அடங்கிய குழுவையும் சுப்ரீம் கோர்ட் அமைத்தது. இதில் ஒருவர் தாமாக விலகி விட்டார். குழுவில் உள்ள 4 பேருமே அரசுக்கு ஆதரவாகவும், சட்டங்களுக்கு ஆதரவாகவும் பல்வேறு தருணங்களில் பேசியவர்கள் என்று கூறி, குழுவை ஏற்க விவசாயிகள் மறுத்து விட்டனர். வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டுமென்பதில் போராட்டம் நடத்தும் 41 விவசாயிச் சங்கங்களும் உறுதியாக உள்ளன. ஆனால், மத்திய அரசு அதற்கு வாய்ப்பே இல்லை என்கிறது. இந்நிலையில், நாளை(ஜன.26) குடியரசு தினத்தன்று திட்டமிட்டபடி பிரம்மாண்ட டிராக்டர்கள் பேரணியை விவசாயிகள் நடத்துகின்றனர். டெல்லி போலீசார் அதற்கு அனுமதி அளித்து விட்டனர். அதாவது, டெல்லி ராஜபாதையில் குடியரசு தின விழா ராணுவ அணிவகுப்பு முடிந்த பின்பு, டிராக்டர் பேரணி தொடங்கலாம்.
டெல்லியின் எல்லைகளான சிங்கு, திக்ரி, காசிப்பூர் பகுதிகளில் இருந்து டிராக்டர் பேரணி தொடங்கலாம் என்றும் போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து, இன்று காலை முதல் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டிராக்டர்களுடன் டெல்லிக்கு படையெடுத்து செல்கின்றனர். பேரணியில் குறைந்தது ஒரு லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கவுள்ளன. இதில், இந்திய விவசாயிகளின் வரலாறு, வேளாண்மை தொழில் குறித்த விழிப்புணர்வு, விவசாயிகளின் வாழ்க்கை முறை போன்றவை குறித்த அலங்கார ஊர்திகளும் பங்கேற்க உள்ளதாகவும், தேசபக்தி, நாட்டுப்புறப் பாடல்கள், கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறும் என்றும் விவசாயச் சங்கத்தினர் தெரிவித்தனர். மொத்தம் 194 கி.மீ. தொலைவுக்கு நடைபெறவுள்ள டிராக்டர் பேரணியில் சுமார் 100 கி.மீ. டெல்லிக்குள் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.