ரெயிலில் ஜன்னலை பூட்ட முடியாததால் மழையில் நனைந்த பயணிக்கு ₹ 8,000 நஷ்ட ஈடு

by Nishanth, Jan 25, 2021, 09:42 AM IST

ஓடும் ரயிலில் ஜன்னலை பூட்ட முடியாததால் மழையில் நனைந்த பயணிக்கு ₹ 8 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த ஒரு பயணி தொடர்ந்த வழக்கில் 7 வருடங்களுக்கு பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் செபஸ்டியன். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன் இவர் திருச்சூரில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ஜனசதாப்தி ரயிலில் பயணம் செய்தார். ரயிலில் ஏறிய சிறிது நேரத்திலேயே மழை பெய்தது.

உடனடியாக பயணிகள் அனைவரும் ரயிலுக்குள் மழைநீர் தெறிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக ஜன்னலை பூட்டத் தொடங்கினர். ஆனால் செபஸ்டியன் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே இருந்த ஜன்னலை பூட்ட முடியவில்லை. பலமுறை முயற்சித்தும் எந்த பலனும் ஏற்படவில்லை. இதுகுறித்து செபஸ்டியன் டிக்கெட் பரிசோதகரிடம் கூறினார். எர்ணாகுளம் வந்த பின்னர் அதை சரி செய்வதாக அவர் கூறினார். ஆனால் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் செபஸ்டியன் திருவனந்தபுரம் வரை ஜன்னல் வழியாக தெறித்த மழை நீரில் நனைந்தபடியே சென்றார்.

திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் இறங்கிய பின்னர் செபஸ்டியன் இதுகுறித்து திருவனந்தபுரம் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரிடம் புகார் அளித்தார். உடனடியாக அந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக ஸ்டேஷன் மாஸ்டர் உறுதி அளித்தார். ஆனால் பல மாதங்கள் ஆன பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து ரெயில்வேயின் அலட்சியம் காரணமாக மழையில் நனைந்து அவதிப்பட்ட தனக்கு 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு கோரி செபஸ்டியன் திருச்சூர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், செபஸ்டியனுக்கு ₹ 8 ஆயிரம் நஷ்டஈடு வழங்க ரயில்வேக்கு உத்தரவிட்டது.

You'r reading ரெயிலில் ஜன்னலை பூட்ட முடியாததால் மழையில் நனைந்த பயணிக்கு ₹ 8,000 நஷ்ட ஈடு Originally posted on The Subeditor Tamil

More India News

READ MORE ABOUT :

அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை